» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் : ஏற்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
திங்கள் 25, மார்ச் 2024 3:11:09 PM (IST)
தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை: நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக கனிமொழி கருணாநிதி உதயசூரியன் சின்னத்திலும், இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சார்பில் நவாஸ்கனி ஏணி சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களை ஆதரித்து தி.மு.கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் 26.03.2024 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி அளவில் எட்டையபுரம் மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள சிந்தலக்கரை கலைஞர் மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற இருக்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மார்க்கண்டேயன் எம்எல்ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்..