» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தடுப்பணையில் மூழ்கி கட்டிட ஒப்பந்ததாரர் சாவு!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:27:55 AM (IST)
முறப்பநாடு அருகே நண்பர்களுடன் குளிக்க சென்றபோது மருதூர் தடுப்பணையில் மூழ்கி கட்டிட ஒப்பந்ததாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை பாளையங்கோட்டை சமாதானபுரம் காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் டைட்டஸ் ரொட்ரிகோ. இவருடைய மகன் ஹார்ட்லி மேக்ஸ்டன் ரொட்ரிகோ (29). என்ஜினீயரான இவர், புது வீடுகள் கட்டி விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து ஆண் குழந்தை உள்ளது.
ஹார்ட்லி மேக்ஸ்டன் ரொட்ரிகோ தனது தந்தை மற்றும் தன்னுடன் பணியாற்றி வரும் நண்பர்கள் 9 பேருடன் காரில் நேற்று காலை 10.30 மணி அளவில் நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள மருதூர் தடுப்பணையில் குளிக்க சென்றார். அங்கு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹார்ட்லி மேக்ஸ்டன் ரொட்ரிகோ திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை காரில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஹார்ட்லி மேக்ஸ்டன் ரொட்ரிகோ பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, நண்பர்களுடன் குளிக்க சென்ற என்ஜினீயர், தடுப்பணையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.