» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை: ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
திங்கள் 24, மார்ச் 2025 12:41:28 PM (IST)
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனெவே மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நூறு சதவீதம் காலியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகளிலேயே பணியாளர்கள் இல்லாத நிலையில், "இல்லம் தேடி மருத்துவம்" என்று தி.மு.க. அரசால் விளம்பரப்படுத்தப்பட்டு வருவது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில், துணை சுகாதார நிலைய அளவில் உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்கள் நூறு சதவீதம் காலியாக உள்ளதாகவும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,066 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2023-ல் வெளியிடப்பட்டதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதுவரை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் வராமல் இருக்கத் தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், மேற்படி பணியிடங்களை நிரப்பக் கோரி வரும் 27-ம்தேதி முதல் மாலை நேரங்களில் தர்ணா போராட்டம் நடத்தவும், ஏப்ரல் 9-ம்தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
நூறு சதவீதம் பணியிடங்கள் காலியாகும் அளவுக்கு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது தி.மு.க. அரசு. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற அக்கறை தி.மு.க. அரசுக்கு உண்மையிலேயே இருக்குமானால், அறிவிப்பில் உள்ள குறைகளை நீக்கி, நீதிமன்ற வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பி இருக்கலாம். தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை. தி.மு.க. அரசின் நோக்கமே காலிப் பணியிடங்களை நிரப்பாமல், திட்டங்களை அறிவித்து விளம்பரத்திலேயே ஆட்சியை நடத்திவிடலாம் என்பதுதான். ஆனால், பொதுமக்கள் கள யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.
"பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எப்போதும் ஏககாலத்தில் ஏமாற்ற முடியாது" என்ற ஆப்ரகாம் லிங்கனின் வரிகளை நினைவுபடுத்தி, காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை: சட்டப்பேரவையில் புதிய மசோதாவை தாக்கல்!
சனி 26, ஏப்ரல் 2025 5:48:56 PM (IST)

பெண்ணை இழிவாகப் பேசுவது சுயமரியாதை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு
சனி 26, ஏப்ரல் 2025 5:03:44 PM (IST)

தோவாளை பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 26, ஏப்ரல் 2025 4:56:58 PM (IST)

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 26, ஏப்ரல் 2025 12:43:35 PM (IST)

த.வெ.க. கட்சியின் தலைவர் விஜய் கோவை வருகை: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
சனி 26, ஏப்ரல் 2025 12:29:48 PM (IST)

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் பேட்டி
சனி 26, ஏப்ரல் 2025 11:36:10 AM (IST)
