» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அடுத்து வருகின்ற ஆண்டுகளில் ராக்கெட் வேக வளர்ச்சி நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

வெள்ளி 9, மே 2025 5:41:23 PM (IST)



ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள் என்று திருச்சியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் இன்று (மே 9) நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "நேற்று பிளஸ் 2 முடிவுகள் வந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக விழுக்காடு மாணவர்கள் தேர்வு பெற்று வருகிறார்கள். 

இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது. இடைநிற்றலே இருக்க கூடாது என்று பள்ளிக்கூடம் போகாமல் இருக்கின்ற மாணவர்களையும் வீடு வீடாக தேடிச் சென்று, அறிவுரை சொல்லி, வேண்டிய உதவிகள் செய்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறோம்.

திருச்சியில் இன்று 408 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்’ உட்பட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில், மிகவும் முக்கியமான திட்டம், இந்த திருச்சி மாவட்டத்தில், தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில், 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் என்னால் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த தொழிற்பூங்காவில் உலகின் முன்னணி நிறுவனங்களான ஜபில், பெப்சிகோ தொழில் துவங்க உள்ளார்கள். இதன் மூலம் மட்டும் 10,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் தான் 400 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பூங்கா என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு அந்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில், 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ‘மெகா’ திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே தரப்பட்டிருக்கிறது. 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்கம் மாநாட்டில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கையை அறிவித்தேன். என்னவென்றால், தமிழ்நாட்டைத் துறைவாரியாக எப்படி உயர்த்துவோம் என்று சொல்லி, ஏழு வாக்குறுதிகளை அப்பொழுது நான் சொன்னேன்.

வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம், இந்த ஏழு வாக்குறுதிகளில் பெரும்பாலனவற்றை இந்த 4 ஆண்டுகளிலேயே நாம் எட்டியிருக்கிறோம்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக்கும், 9.69 விழுக்காடு என்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி. இந்தியாவிலேயே நாம் தான் நம்பர் ஒன். வேளாண்மையைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு ஆண்டும் பாசனப் பரப்பும் விளைச்சலும் அதிகமாகி சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்றத்தில், தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்தோம். அதேபோல், கல்வியை எடுத்துக் கொண்டால், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற நம்முடைய புரட்சித் திட்டங்கள் காரணமாக, உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும், இந்தியாவின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம்.

தலைசிறந்த கல்வி நிறுவனங்களில், ஐந்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்று மத்திய அரசே ரிப்போர்ட் தருகிறார்கள். காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களால், பள்ளிக் கல்வியில், பெரும் வளர்ச்சியை பார்க்கிறோம். மாணவர்கள் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. சத்துக்குறைபாடு குறைந்திருக்கிறது. 

அட்டெண்டன்ஸ் கூடியிருக்கிறது. மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், நம்முடைய தொலைநோக்குத் திட்டமான, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, ஐநா விருதையும் பெற்றிருக்கிறோம். நகரங்களை மட்டுமல்ல, கிராமங்களையும் வளர்த்திருக்கிறோம். இது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூகநீதி அரசை உருவாக்கி இருக்கிறோம்.

எந்த பிரிவினரும் விட்டுப்போகக் கூடாது என்று கவனமாக செயல்பட்டு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், விளிம்பு நிலை மக்கள் என்று எல்லாருக்குமான ஆட்சியாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி, நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 

அடுத்து வருகின்ற ஆண்டுகளில், இப்போது நான் சொன்ன சாதனைகளை எல்லாம், நாமே வென்றுவிடுவது போல் இதைவிட பெரிய சாதனைகளை படைப்போம் என்று உறுதியாக சொல்கிறேன். இதைத்தான் நம்முடைய அரசியல் எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுடைய கடந்த ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்று சிறியதாக ‘ரீவைண்ட்’ செய்து பார்க்கலாமா?

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உழவர்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் அந்த போராட்டத்தை இழிவுபடுத்தி பேசினார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய, அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி பேசினார். காவிரி நீர் உரிமையை பெறவும் உச்ச நீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அதனால், உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு அந்த துயரங்கள் எல்லாம் நடந்தது.

இலங்கைத் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டம், அதிமுக ஆதரித்து வாக்களித்த ஒரே காரணத்தால்தான் அது நிறைவேறியது. நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் பற்றி எரிந்தது. ஏன், ஜிஎஸ்டி-க்கு தலையாட்டி, நம்முடைய அரசுகளின் உயிர் மூச்சான வரிவிதிப்பு உரிமையும் போனது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் என்று பொது மக்களையே கொன்று குவித்தார்கள்.

ஏன் இதையெல்லாம் இப்போது நினைவுபடுத்துகின்றேன் என்றால், அப்படிப்பட்ட இருண்ட ஆட்சியிலிருந்து, நான்கே ஆண்டுகளில், நம்முடைய விடியல் ஆட்சி எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம் என்று நீங்கள் ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் சொன்னேன். இது வெறும் தொடக்கம்தான். நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன். திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 இனிதான் லோடிங்.

4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம். இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும். ராக்கெட் வேக வளர்ச்சி என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள். அது நடந்தேற, தொடரட்டும் நமது திராவிட மாடல் ஆட்சி” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory