» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக முப்பெரும் விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!

வியாழன் 18, செப்டம்பர் 2025 10:27:27 AM (IST)



கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கனிமொழிக்கு பெரியார் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் ஈவெரா பிறந்த நாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா ஆகிய முப்பெரும் விழா கரூா் கோடங்கிப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் தொடங்கி நடைபெற்றது.

விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார். இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப. செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

விழாவில், பெரியார் விருதை கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.க்கும், அண்ணா விருதை தணிக்கை குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சு.ப. சீதாராமனுக்கும், கலைஞர் விருதை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மறைந்த குளித்தலை சிவராமனுக்காக அவரது குடும்பத்தாருக்கும், பேராசிரியர் விருதை ஆதிதிராவிடர் நலக்குழு தலைவரும், 

சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் ராமலிங்கத்துக்கும், மு.க.ஸ்டாலின் விருதை ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலர் பொங்கலூர் நா.பழனிசாமிக்கும், முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருதை மூத்த பத்திரிகையாளர் ஏ. எஸ்.பன்னீா்செல்வத்துக்கும் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை கழக விருதுகளாக தமிழகத்தில் உள்ள நான்கு மண்டலங்களில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பணமுடிப்பு ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


இவ்விழாவில் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கட்சியின் பல்வேறு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory