» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்று கிராமசபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக 12 ஆயிரத்து 480 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்படும். சிறப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 முறை கிராம சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று (11-ந் தேதி) நடைபெற்று வரும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், "நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் காந்தி கூறினார். கிராம பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என திட்டங்கள் தீட்டியுள்ளோம். இத்திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை. முல்-அமைச்சராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.

கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு தவிருங்கள். சின்னச் சின்ன விஷயங்களை சரியாக செய்தால், பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும். பணத்தை தண்ணீராக செலவழிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், தண்ணீரைத்தான் பணம் போல் செலவழிக்க வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட |நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவிக்குழு திட்டம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முதல்-அமைச்சர் பேசி முடிந்த பிறகு கிராம சபைகளில் 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில், உடனடியாக செய்யப்பட வேண்டிய 3 அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. நம்ம ஊரு நம்ம அரசு என்ற திட்டத்தின்படி ஊராட்சியில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழிவுபடுத்தும் பொருள் தரும் சில சாதிப் பெயர்களை குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், பொதுப்பகுதிகளுக்கு வைத்திருந்தால் அந்த பெயரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்று பொதுப் பெயர்களையும் அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் இந்த நோக்கத்தை தனிச்சையாக செய்யாமல், மக்களையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்பதே அரசின் விருப்பம். எனவே அதையும் இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் முடிவு செய்யலாம். எந்தப் பெயரையும் மாற்றம் செய்ய வேண்டாம் என்று மக்கள் விரும்பினால் அதை மாற்றத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் செய்யப்பட்டால் அரசு முடிவு செய்து அரசிதழ் பிறப்பிக்கப்படும். இதே நடைமுறை, இந்த மாத இறுதியில் நகர்ப்புறங்களில் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 838 வார்டுகளில் நடைபெறும் வார்டுசபை கூட்டங்களிலும் பின்பற்றப்படுகிறது. கிராமங்களில் ஏழ்மையாக உள்ள குடும்பங்களுக்கு ஏழ்மை ஒழிப்பு கடனுதவியை வழங்கும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் கிராம சபை கூட்டத்தில் மக்கள் வெளிப்படையாக முடிவெடுத்து, அவர்களில் முன்னுரிமை யாருக்கு தர வேண்டும் என்பதை பட்டியலிடுவார்கள். யார், யாருக்கு என்ன கடன் தர வேண்டும்? என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இதுதவிர மழைநீர் சேகரிப்பு, கொசு - டெங்கு ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் நிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் கோரிக்கைப்படி, சபாசார் இணையதளத்தில் 7,515 கிராம ஊராட்சிகளின் கிராமசபா கூட்டங்களின் வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஊர்களில் உள்ள சாதிப்பெயரை நீக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முன்பே வெளியிட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory