» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது :மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சனி 11, அக்டோபர் 2025 4:28:28 PM (IST)
எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்பட 90 திரைக்கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப்பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
விழாவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அகில இந்திய விருது பெறும் கலைஞர்கள் என்ற வகையில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, பாரதியார் விருது ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது கே.ஜே.ஜேசுதாசுக்கும் (அவருக்கு பதிலாக மகன் விஜய் ஜேசுதாஸ் பெற்றுக்கொண்டார்), பாலசரசுவதி விருது முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்பட்டது. விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 பவுன் தங்கப் பதக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்து மகிழ்ந்தார்.
அதனைத்தொடர்ந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், ஜார்ஜ் மரியான், நாடக நடிகர் பூச்சி எஸ்.முருகன், நடிகைகள் சாய் பல்லவி, ‘மெட்டி ஒலி' காயத்ரி, இசையமைப்பாளர் அனிருத், பாடகி ஸ்வேதா மோகன் (அவருக்கு பதிலாக தாயார் சுஜாதா பெற்றுக்கொண்டார்) டைரக்டர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், செய்தி தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, நிகில் முருகன், சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, வில்லுப்பாட்டு கலைஞர் டி.ஜெகநாதன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதை (3 பவுன் தங்கப்பதக்கம், விருது பட்டயம்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1967-ல் அண்ணா கையால், கருணாநிதி பெற்ற கலைமாமணி விருதை, இன்றைக்கு நீங்களும் பெற்றிருக்கிறீர்கள். மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு, மிகச்சரியானவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு நாட்டில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவு மதிப்புமிக்க தங்கத்தைவிட, தமிழ்நாடு தரும் கலைமாமணி பட்டத்திற்குத்தான் மதிப்பு அதிகம்.
திராவிட மாடல் அரசும் முத்தமிழ்க் கலைஞர்களை போற்றி வருகிறது. கலைஞர் வழியில், கலைஞர்களை போற்றும் அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. கலைஞரின் அரசு கலைகளைப் போற்றும் அரசாக, முத்தமிழைப் போற்றும் அரசாகத்தான் எப்போதும் இருக்கும். அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டுதான், சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு எடுத்த மாபெரும் பாராட்டு விழா. அவர் மீது நமக்கு இருப்பது கலை பாசம், தமிழ் பாசம். தமிழர் என்ற பாசம்.
கலைகள், தமிழை வளர்க்கும் பெரும் தொண்டை செய்தது, செய்து கொண்டிருக்கிறது. கருத்து, கொள்கை, பாணி, பரப்புரை ஆகிய அனைத்தையும் நாடகக் கலையில் நுழைத்தது திராவிட இயக்கம்தான். எழுத்தும், பேச்சும், இலக்கியமும், கலையும், மொழியை வளர்க்கிறது. மொழியைக் காக்கிறது. மொழி சிதைந்தால், இனமும், பண்பாடும் சிதைந்துவிடும்.
நம்முடைய அடையாளமே அழிந்துவிடும். அடையாளம் அழிந்தால், தமிழர் என்று சொல்லிக் கொள்கின்ற தகுதியையே இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியையும், சுயமரியாதையையும் இழந்து, வாழ்வதில் என்ன பயன்? அதனால் கலைகளை, மொழியை, இனத்தை, அடையாளத்தை காப்போம். நம்முடைய கலைஞர்கள் உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும். தமிழ்க்கலைகளை பரப்ப வேண்டும். அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு - அறநிலையங்கள்துறை கூடுதல் தலைமை செயலாளர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கவிதா ராமு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என கருத வேண்டாம்: டிடிவி தினகரன் பேட்டி
சனி 11, அக்டோபர் 2025 5:44:12 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)

கரூர் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை: 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல்!
சனி 11, அக்டோபர் 2025 12:24:51 PM (IST)

இருமல் மருந்து விவகாரம்: உலக அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு - சீமான்
சனி 11, அக்டோபர் 2025 12:05:32 PM (IST)
