» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகம், கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடக்கலையா? ராகுலுக்கு கிரண் ரிஜிஜு கேள்வி
புதன் 5, நவம்பர் 2025 3:47:46 PM (IST)
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.
பீகார் தேர்தலில் வெல்ல முடியாது என்பதாலேயே ராகுல் காந்தி ஹரியானா குறித்துப் பேசி, மக்களைத் திசைதிருப்புவதாகச் சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ் வென்ற கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் வென்ற தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வாக்கு திருட்டு நடைபெறவில்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாகச் சில பகீர் புகார்களை முன்வைத்தார். ஹரியானாவில் மிகப் பெரியளவில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாடு முழுக்க வாக்கு திருட்டு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ராகுல் காந்திக்கு பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைப்பதற்காக இப்படிப் பேசி வருகிறார்.. நாளை பீகாரில் தேர்தல் நடைபெறவுள்ளது.. ஆனால் அவர் ஹரியானா குறித்துப் பேசியுள்ளார். காங்கிரஸால் பீகாரில் வெல்ல முடியாது என்பதால் தான் இப்படிச் செய்து கவனத்தைத் திசைதிருப்புகிறார்கள். இந்த நேரத்தில் ஹரியானா பிரச்சனையை எழுப்ப இதுதான் காரணம்..
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் தீவிரமான பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும்.. பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன். ஒரு நல்ல விஷயத்தைப் பற்றிப் பேசும் போது, அது குறித்து விவாதிப்பது மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் இது எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒரு விஷயம்.
இருப்பினும், அவருக்கு நான் பதில் கொடுக்க வேண்டி இருக்கிறது. ராகுல் காந்தி தனது தோல்விகளை மறைக்கவே மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், அவர் மின்டா தேவி என்ற பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அதை ஒரு டீ-ஷர்ட்டில் அச்சிட்டு, நாடாளுமன்றத்தில் எல்லாருக்கும் கொடுத்தார். அந்தப் பெண்ணை பற்றி தவறான தகவல்களைப் பரப்பினர்.. ஆனால் அன்று மாலையில், அந்தப் பெண்ணே காங்கிரஸ் கட்சியைக் கடிந்து கொண்டார்.
ராகுல் காந்தி இன்று பேசும்போது ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டார். தேர்தல்களின் போது அவர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது, அவர் கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களுக்கு ரகசியமாகச் செல்கிறார். இப்போது கூட பீகார் தேர்தல்களின் போது, அவர் கொலம்பியாவுக்குச் சென்றார்.
இப்படி அவர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்கு இவருக்குச் சில ஐடியாக்கள் வந்திருக்கலாம். அதை டீமிடம் கொடுத்து ஆதாரமற்ற கதைகளைத் தயாரித்து, அனைவரின் நேரத்தையும் வீணடிக்கிறார்கள். அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும், இது போன்ற பயனற்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. இது அவருக்கு ஒரு அட்வைஸாகவே கொடுக்க விரும்புகிறேன்.
ஹரியானாவில் நடந்த தேர்தலில் எக்ஸிட் போல்களில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்ததாக ராகுல் காந்தி கூறுகிறார். தேர்தலுக்கு முந்தைய சர்வே, எக்ஸிட் போல் என்பது அப்படியே தேர்தல் முடிவாக இருக்காது என்பது கூடவா அவருக்குத் தெரியாது. 2004ல் தேர்தலுக்கு முந்தைய சர்வே, எக்ஸிட் போல் என அனைத்திலும் பாஜக வெல்லும் என்றார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணி வென்றது. அப்போது நாங்கள் தேர்தல் முறைகேடு எனச் சொல்லவில்லை. தேர்தல் ஆணையத்தைக் குற்றஞ்சாட்டவில்லை.
நாங்கள் தொடர்ந்து போராடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றதால் தான் வெற்றி பெற்று வருகிறோம்.. பாஜக ஒருபோதும் நீதிமன்றங்களை அவமரியாதை செய்ததில்லை.. தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தியதில்லை.. நாட்டின் ஜனநாயக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கியதில்லை.. ஏதேனும் தவறு நேர்ந்தால், நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோமே தவிர, இந்தியாவின் ஜனநாயகத்தை அவமரியாதை செய்ததில்லை..
ஆனால், சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தபடி நாட்டிற்கு எதிராகப் பேசுகிறார்கள். இந்திய அமைப்பு, நீதித்துறை, ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறார்கள். அவர்கள் மக்களிடையே செல்லாமல் வெளிநாடுகளில் அலைந்து திரிவதால் அடுத்து வரும் தேர்தல்களிலும் தோல்வியடைவது உறுதி..
அது சரி, வாக்கு திருட்டு என்கிறாரே.. காங்கிரஸ் கட்சி சில மாநிலங்களில் வெற்றி பெற்றபோது மட்டும், அந்த முடிவுகளை ஏன் கேள்வி கேட்கவில்லை.. தெலுங்கானா, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வென்றது? தமிழகம் மற்றும் கேரளாவில் எதிர்க்கட்சிகள் எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளன? அந்த வெற்றிகளை பாஜக ஒருபோதும் சந்தேகப்பட்டதே இல்லை" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 5, நவம்பர் 2025 5:21:10 PM (IST)

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 5, நவம்பர் 2025 4:08:28 PM (IST)

கருணாநிதி கைதானபோது நீங்கள் ஓடியது தெரியாதா? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
புதன் 5, நவம்பர் 2025 4:00:41 PM (IST)

2026 தேர்தலில் 100 சதவீத வெற்றி நிச்சயம்: தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேச்சு
புதன் 5, நவம்பர் 2025 3:36:26 PM (IST)

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியை வீட்டில் 57 பவுன் நகை திருட்டு : போலீஸ் விசாரணை!
புதன் 5, நவம்பர் 2025 12:53:45 PM (IST)

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!
புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)




