» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை: பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!

திங்கள் 29, டிசம்பர் 2025 4:41:54 PM (IST)



சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில், "நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை" என்று கூறி ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச. 29) காலை நடைபெற்றது. இதில் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் என 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

கூட்டத்தில் ஒவ்வொருவராக பேசிய நிலையில் இறுதியாக பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் பேசத் தொடங்கினார். பேச்சின் தொடக்கத்திலேயே அன்புமணி பற்றி பேசியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி, ராமதாஸை தேற்றினார்.

ஒருநாள் தன்னுடைய தாய் கனவில் வந்ததாகவும் அப்போது அன்புமணி குறித்து பேசியதாகவும் கூறிய ராமதாஸ், அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை என்று தன்னுடைய தாய் கூறியதாகத் தெரிவித்தார். தானும் அதை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். அப்போதுதான் அவர் கண்ணீர் விட்டு அழுத நிலையில், 'அழ வேண்டாம்' என்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.

கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசிய ராமதாஸ், "நான் வளர்த்த பிள்ளைகள், நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள் என்னை மிகவும் மோசமாகத் தூற்றுகிறார்கள். நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை. அப்படி சரியாக வளர்த்திருந்தால் என்னை மார்பில், முதுகில் குத்தியிருக்கமாட்டார். அவருக்கு ஒரு குறையும் நான் வைக்கவில்லை. மற்ற தகப்பனைவிட அதிகமாக அவருக்குச் செய்திருக்கிறேன். சில்லறை பையன்களை வைத்துக்கொண்டு என்னை அவமானப்படுத்துகிறார்.

30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த ஜி.கே. மணியை அன்புமணி அவமானப்படுத்தினார். தொடர்ந்து என்னையும் நேரடியாக தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அன்புமணி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என என்னுடைய மருத்துவர்களே கேட்கின்றனர்.

இரவில் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்கம் வருவதில்லை. அன்புமணி செய்தது ஞாபகம் வந்துவிடுகிறது. ஆனால் என்னுடைய மக்களை நினைக்கும்போது ஆறுதலாக இருக்கிறது. இதுபோன்று ஒரு தகப்பன் உலகில் யாருக்கும் கிடைத்திருக்க மாட்டார். 100க்கு 95% மக்கள் என்னுடன்தான் இருக்கின்றனர். அன்புமணியிடம் 5% மக்கள்கூட இல்லை. இந்த தேர்தலில் அவருக்கு சரியான பதிலடி கிடைக்கும்" என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory