» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக தலைமை மீது சரத்குமார் அதிருப்தி: அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக எச்சரிக்கை

திங்கள் 23, மார்ச் 2026 12:12:38 PM (IST)

"பாஜகவில் எனக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. உரிய பொறுப்புகள் இல்லாமல் தேர்தல் களத்தில் எவ்விதம் பணியாற்ற முடியும்?" என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தி.நகரில் நேற்று சரத்குமார் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய சரத்குமார் தலைமை ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் மற்றும் சுப்ரீம் ஸ்டார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் கூறியதாவது: இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, பாஜகவில் இணைந்த பிறகு எனக்கு இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சிப் பொறுப்பு இல்லாமல் களப்பணியாற்றுவது கடினம் என்பதே அவர்களின் பிரதானக் கவலை."

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2024 மார்ச் 12-ஆம் தேதி பாஜகவில் இணைந்தபோது, தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். "எங்கள் மாநில நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், 'தலைவருக்கே (சரத்குமார்) பொறுப்பு இல்லாதபோது, எங்களுக்கு மட்டும் பொறுப்புகள் இருந்து என்ன பயன்?' என நிர்வாகிகள் வருந்துகின்றனர்," என்றார்.

கட்சியில் தமக்குள்ள நிலையை ஒரு உதாரணத்தின் மூலம் அவர் விளக்கினார்: "கார் ஓட்டத் தெரிந்தும், ஓட்டுநர் உரிமம் இருந்தும், காரை ஓட்ட அனுமதி மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு பொறுப்பு இருந்தால் மட்டுமே என்னால் முழுமையாகச் செயல்பட முடியும். திருச்சி மாநாட்டில் எனது புகைப்படம் கூட மேடையில் இடம்பெறாதது நிர்வாகிகளிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் பொறுப்பு வழங்கக் கோரி அக்கட்சியின் மாநில மற்றும் தேசியத் தலைமைக்குக் கடிதம் எழுதவுள்ளதாகச் சரத்குமார் தெரிவித்தார். தலைமை தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் என நம்புவதாகவும், ஒருவேளை பொறுப்புகள் வழங்கப்படாவிட்டால், மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி தனது அடுத்தகட்ட முடிவை அறிவிப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory