» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்வு முடிவு பயம்: 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – பெற்றோர்கள் சோகம்!

புதன் 22, ஏப்ரல் 2026 8:23:00 AM (IST)

கன்னியாகுமரி அருகே, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், அதில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பூவன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (48), விவசாயி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அம்லின் ஜெருல் (15), மைலோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருந்தார்.

தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த அம்லின் ஜெருல், தேர்வு முடிவுகள் குறித்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அவரது பெற்றோர் மேல்பெடிப்பு குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, தனக்குத் தேர்வு முடிவுகளை எண்ணிப் பயமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் இரவு உணவு அருந்திவிட்டுத் தனது அறைக்குத் தூங்கச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்துத் தந்தை அருள்குமார் மகளின் அறை கதவைத் தட்டியபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கூப்பிட்டும் பதில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அம்லின் ஜெருல் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே, பயம் காரணமாக இளம்பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory