» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!

சனி 16, மே 2026 4:27:27 PM (IST)



வாகன ஓட்டுநர்களால் பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுறுத்தினார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் செயல்பாட்டில் உள்ள வாகனங்களை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், முன்னிலையில் இன்று (16.05.2026) பார்வையிட்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்- தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இயங்குகிறதா? என ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் என 2 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன. இதில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்திற்கு கீழ் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 86 பள்ளிகளில் 315 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று பள்ளி வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அவற்றில் படிக்கட்டுகள் தரையிலிருந்து முதல் படியின் உயரம் 250 மி.மீ மிகாமலும், வழுக்காதவாறு (Non-slip treads) அமைக்கப்பட்டுள்ளதா? ஓட்டுநருக்கும் மாணவர்களுக்கும் இடையே தனித்தடுப்பு வசதி உள்ளதா? இருக்கைகள் மாணவர்களுக்கு வசதியாக உள்ளதா?, தரைப்பகுதி பலவீனமடையாமல் தட்டையான பலகைகளால் சீராக அமைக்கப்பட்டுள்ளதா, அவசர கால கதவு மற்றும் எளிதாகத் திறக்கும் வசதிகள் சரியாகச் செயல்படுகின்றனவா?, 

முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் பொருத்தப்பட்டுள்ளனவா? ஜன்னல்களில் மூன்று இரும்பு கம்பிகள் உள்ளனாவா?, வேகம் கட்டுப்படுத்தும் கருவி உள்ளதா, பள்ளி பேருந்திற்கான பிரத்யேக மஞ்சள் நிறம் மற்றும் பள்ளி விவரங்கள் ஆகியவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா?, வாகனங்களின் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளதா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பள்ளி வாகனங்களில் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

ஆய்வின் போது, பெரும்பாலான வாகனங்கள் தகுதித்தரத்துடன் இருந்த நிலையில், ஒரு சில வாகனங்களில் சிறிய அளவிலான குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த வாகனங்களின் உரிமையாளர்களிடம் குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்து, 15 நாட்களுக்குள் மீண்டும் ஆய்வுக்குட்படுத்திய பிறகே இயக்க வேண்டும். அரசு விதிகளின்படி அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்த பள்ளி வாகனங்களுக்கு, நடப்பாண்டில் இயக்குவதற்கான சான்றளிப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது.

மேலும் பள்ளி வாகனங்களில் குழந்தைகளை பத்திரமாக ஏற்றி செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்த கூடாது. சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும். சீட் பெல்ட் போட்டு வாகனம் ஓட்ட வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வாகன ஓட்டுநர்களால் பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால், வாகனங்களில் தீ அபாயம் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கையாள வேண்டுமென்றும், தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் ஓட்டுநர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) சுரேஷ்பாபு, மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) அஜிதா, மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ்குமார், துறை அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள், வாகன ஓட்டுநர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory