» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக தலைமைச் செயலகத்தில் திடீர் சமரசம்: இனி நமக்குள் பிரிவில்லை என ட்வீட்!

புதன் 27, மே 2026 12:23:54 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்டிருந்த உட்கட்சி அதிகாரப் போட்டி மற்றும் பிளவுகள் முடிவுக்கு வந்து, இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருந்த கடுமையான உட்கட்சி அதிகாரப் போட்டி மற்றும் பிளவுகள் முடிவுக்கு வந்து, இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'இனி நமக்குள் பிரிவில்லை; கோட்டையில் மீண்டும் இரட்டை இலை கொடி பறப்பதே இலக்கு' என அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மொத்தம் 47 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டது. எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய தவெக அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராகினர். மறுபுறம், 22 சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்குத் தங்களது ஆதரவை வழங்கினர்.

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்பி வேலுமணியை நியமிக்கக் கோரி 25 சட்டமன்ற உறுப்பினர்களும், எடப்பாடி பழனிசாமியை நியமிக்கக் கோரி 22 சட்டமன்ற உறுப்பினர்களும் தனித்தனியாகச் சபாநாயகரிடம் மனுக்களை அளித்தனர். இதனால் அதிரடி நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணியைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்ததுடன், அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தயாரானார். இதன் உச்சக்கட்டமாக, வேலுமணி அணியில் இருந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

கட்சி முழுமையாக உடையும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்று வேலுமணி அணியைச் சேர்ந்த முக்கிய மூத்த தலைவர்களான நத்தம் விஸ்வநாதன், அருண்மொழித் தேவன், ஹரி மற்றும் தங்கமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு எக்ஸ் தளப் பதிவு:
இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தச் சமரசத்தை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக ஊடகத் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா தெரிவித்து இருந்தார்.

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையைத் தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை. நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே. நாளை நமதே, தமிழ்நாடும் நமதே!"

இருப்பினும், இந்தச் சமரசம் குறித்த செய்திக் குறிப்பையோ அல்லது அதிகாரப்பூர்வத் தகவலையோ அதிமுக தலைமை இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை. இதை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவாக மட்டுமே அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பகிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திடீர் சமரசம் தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory