» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில் திருப்பணிக்கு மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் : கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்!
சனி 13, ஜூன் 2026 8:34:15 AM (IST)

எட்டயபுரம் அருகே கோவில் திருப்பணிக்காகச் சரள் மண் ஏற்றி வந்த டிராக்டரைக் காவல் துறையினர் பறிமுதல் செய்ததைக் கண்டித்து, தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் கிராமத்தில் பழமையான சந்தனமாரியம்மன், துர்க்கையம்மன், முனியசாமி மற்றும் காளியம்மன் கோவில்களைப் புனரமைப்பு செய்து, ஜூன் 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கிராம மக்கள் செய்து வருகின்றனர். தற்போது கோவில் சுற்றுப்புறப் பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால், அதனைச் சரள் மண் கொட்டி சரிசெய்யக் கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாய்மொழி அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஊருணியில் இருந்து கிராம மக்கள் டிராக்டர் மூலம் சரள் மண் எடுத்து வந்து கோவில் திருப்பணிக்கு விநியோகித்து வந்தனர். இந்த நிலையில், எட்டயபுரம் காவல் சார்பு ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் மேலஈரால் கிராமத்திற்குச் சென்று, சரள் மண் அள்ளி வந்த டிராக்டரை அதிரடியாகப் பறிமுதல் செய்தார்.
இதற்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றே மண் அள்ளுவதாகக் கூறினர். எனினும், அதனை ஏற்க மறுத்த அவர், டிராக்டர் மற்றும் அதன் ஓட்டுநர் பொன்ராஜை எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
சார்பு ஆய்வாளரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மேலஈரால் கிராம மக்கள், அவரைக் கண்டித்தும், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் மற்றும் ஓட்டுநர் பொன்ராஜை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று மாலை 4.20 மணியளவில் தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச்சாலையில் கீழஈரால் விலக்கு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை - ஓட்டுநர் விடுவிப்பு
பெண்கள் உட்பட திரளான கிராம மக்கள் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது குறித்துத் தகவலறிந்த எட்டயபுரம் காவல் ஆய்வாளர் சேகர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவில் திருவிழாப் பணிக்காக மண் அள்ளப்பட்டதை உணர்ந்த அதிகாரிகள், காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டிராக்டர் மற்றும் ஓட்டுநர் பொன்ராஜை உடனடியாக விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்களது மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டம் காரணமாகத் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்துப் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி: எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 1:03:58 PM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

ரஜினிகாந்த் பெயர், புகைப்படத்தை அமைப்புகளுக்குப் பயன்படுத்தத் தடை: தலைமை ரசிகர் மன்றம் அறிக்கை
ஞாயிறு 14, ஜூன் 2026 8:47:41 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)


