» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் நடத்துவது லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி - தூத்துக்குடியில் வைகோ அதிரடி பேச்சு!

வெள்ளி 3, ஜூலை 2026 7:38:18 AM (IST)

tutVaikoMeet.jpg

விஜய் நடத்துவது லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி, கேபினட் மந்திரி பதவியே வேண்டாம் என்று வந்தவன் நான் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். 

பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, "சிலர் நான் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மந்திரியாக ஆசைப்படுவதாக எழுதுகின்றனர். எனக்குக் கேபினட் அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னபோதே வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்தவன் நான். எந்த சுயநலத்திற்கும் நான் ஆசைப்பட்டதில்லை. என் கரங்கள் கரைபடியாதவை என்பதை இயற்கையே சொல்லும். என் மீது பழிதூற்றலாம், கோடி கோடியாகச் சேர்த்துவிட்டதாக நாக்கு கூசாமல் சொல்லலாம்; ஆனால், சாகும் வரை என் வாழ்வில் நேர்மையைக் காப்பேன். கடுமையான விமர்சனங்களையும் பழிச்சொற்களையும் புன்முறுவலோடு எதிர்கொண்டு வருகிறேன்" என்று குறிப்பிட்டார்.

மேலும், திமுகவில் 29 ஆண்டுகள் பணியாற்றியது, 12 மாதங்கள் விசா சிறைவாசம் மற்றும் 25 முறை சிறை சென்றது உள்ளிட்ட தனது அரசியல் வரலாற்றையும், தனக்குக் கலைஞர் வழங்கிய ராஜசபா பதவியின் மூலம் தமிழகத்திற்காக நாடாளுமன்றத்தில் கொடி பிடித்துப் போராடியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் விழிகள்:

பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசிய வைகோ, "ஜனநாயகத்தின் விழிகளும் செவிகளும் பத்திரிகையாளர்கள்தான். பொடா சட்டம் வந்தபோது பத்திரிகையாளர்களையும் கைது செய்யும் சரத்து இருந்தது. அதை வாஜ்பாய் மற்றும் அத்வானியிடம் எடுத்துக்கூறி நீக்கச் செய்தேன். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது நேரில் சென்று சிறைவாசல் வரை மறித்துப் போராடினேன். சில நாட்களுக்கு முன்பு நான் கூறிய ஒன்று இரண்டு சொற்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, எனது வருத்தத்தைத் தெரிவித்துவிட்டேன். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியவர்கள் பத்திரிகையாளர்கள்தான்" என்றார்.

விஜய் ஆட்சிக்கு ஆதரவு:

பொதுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம், கன்னியாகுமரி அணு கனிம சுரங்க கால நீட்டிப்பு குறித்துக் கேட்டதற்கு, அதுபற்றித் தனக்குத் தெரியாது என்றும், தெரிந்த விஷயங்களுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து தற்போதைய ஆட்சி குறித்துப் பேசிய அவர், "தற்போதைய தமிழக ஆட்சி லஞ்சம், ஊழல், கமிஷன் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் நேர்மையாக நடைபெறுகிறது. இந்த ஆட்சியை விஜய் மிக நேர்மையாக நடத்துகிறார். கடந்த ஆட்சியில் நிலவிய கமிஷன் கலாச்சாரம் தற்போது இல்லை என மக்கள் கூறுகின்றனர். போகப்போக மற்ற நிர்வாக நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு வெற்றிகரமாக ஆட்சியை விஜய் நடத்துவார்" எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர் ஹென்றி தீபேன், திருமுருகன் காந்தி, கனகராஜ், பேராசிரியை பாத்திமா பாபு, வியனரசு, நக்கீரன் முருக பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory