» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆடிஷன் என்ற பெயரில் நடிகையிடம் அத்துமீறல் : போலி தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது!

செவ்வாய் 14, ஜூலை 2026 12:22:47 PM (IST)

auditionArrest.jpg

பக்திப் படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்க வைப்பதாகக் கூறிச் சீரியல் நடிகையை விடுதிக்கு வரவழைத்து, ஆடை களையச் சொல்லி மிரட்டிய போலி தயாரிப்பாளர் மற்றும் பெண் உதவியாளர்கள் இருவரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நந்தி ராமநாதன் என்பவர், தன்னைச் சினிமா தயாரிப்பாளர் எனப் பலரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். புதிய பக்திப் படம் ஒன்றில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கப் புதுமுகங்கள் தேவை என அவர் விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பித் தொடர்பு கொண்ட சீரியல் நடிகையை, விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு ஆடிசனுக்காக நந்தி ராமநாதன் வரவழைத்துள்ளார்.

அங்குச் சென்ற நடிகையிடம், நந்தி ராமநாதனின் உதவியாளர்கள் எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட தரமணியைச் சேர்ந்த இந்திராணி, விருதுநகரைச் சேர்ந்த கேமரா பெண் பார்திகா ஆகியோர் நடிகையைத் தங்களது கைபேசியில் வெவ்வேறு கோணங்களில் போட்டோ எடுத்துள்ளனர். தொடர்ந்து, கதாபாத்திரத்திற்கு உடம்பில் தழும்பு இருக்கக் கூடாது என்றும், அதைச் சரிபார்க்க ஆடையைக் களையும்படியும் வற்புறுத்தியுள்ளனர். 

நடிகை அதற்கு மறுப்புத் தெரிவித்து அங்கிருந்து வெளியேற முயன்றபோது, மூன்று பேரும் சேர்ந்து அவரை அறையிலேயே அடைத்து வைக்க முயற்சி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நடிகை விடுதி அறையில் சத்தமிட்டுக் கொண்டே தப்பி ஓடிவந்து, சென்னை காவல் துறையின் 'சிங்கப்பெண்' சிறப்புப் படைக்குப் புகார் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பெண் படை காவல்துறையினர், விடுதியில் பதுங்கியிருந்த போலி தயாரிப்பாளர் நந்தி ராமநாதன், இந்திராணி மற்றும் பார்திகா ஆகிய மூவரையும் பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைதான நந்தி ராமநாதன் இதுவரை எந்தப் படத்தையும் தயாரிக்காத போலி தயாரிப்பாளர் என்பதும், இதுபோன்று போலியான விளம்பரங்களைக் கொடுத்துப் பெண்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் தவறான காணொளிகள் மற்றும் நிழற்படங்களை எடுத்து மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory