» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள்: பள்ளிகளில் ஜூலை 18 போட்டிகள் நடத்துவதற்கு அன்புமணி எதிர்ப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 12:56:40 PM (IST)
ஜூலை 18-ஆம் நாளைத் தமிழ்நாடு நாள் என்று நிலைநிறுத்துவதையும், தவறான வரலாற்றின் அடிப்படையில் பள்ளிகளில் போட்டிகள் நடத்துவதையும் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்குத் தமிழ் மொழியின் பெருமை மற்றும் வரலாறு குறித்துப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.50,000, ரூ.30,000, ரூ.20,000 பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சி சார்ந்த இத்தகைய பணிகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், இதன் மூலம் வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகள் தொடர்வதை அனுமதிக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இந்திய விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலப் பிரிப்புப் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை மாகாணத்தின் எல்லைகள் பிரிக்கப்பட்டுத் தனி நிலப்பரப்பாக உருவானது. இந்த எல்லைப் பிரிவினையின் அடிப்படையிலேயே அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை நவம்பர் 1-ஆம் தேதியைத் தங்களது மாநில நாளாகக் கொண்டாடி வருகின்றன.
இதனையொட்டி நவம்பர் 1-ஆம் தேதியைத் 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாட வேண்டும் என்று தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தியதன் பேரில், 2019-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்தார். ஆனால், 2021-ஆம் ஆண்டில் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஜூலை 18-ஆம் தேதியைத் தமிழ்நாடு நாளாக அறிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், 1956 நவம்பர் 1-ஆம் தேதி மாநில எல்லைகள் பிரிக்கப்பட்ட பின்னரும் பத்தாண்டுகளுக்கு மேலாகச் சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1967-இல் அண்ணா முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், சென்னை மாகாணத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் ஜூலை 18-இல் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 1969 ஜனவரி 14 அன்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டது.
மாநிலம் பிறந்த நாளைத்தான் அதன் நாளாகக் கொண்டாட முடியும் என்றும், பெயர் சூட்டத் தீர்மானம் இயற்றப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது வரலாற்றுத் திரிபாகும் என்றும் அவர் சாடியுள்ளார். திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கையைத் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) புதிய அரசும் பின்பற்றி நியாயப்படுத்துவது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆகவே, ஜூலை 18-ஆம் நாளைத் தமிழ்நாடு நாள் என்று நிலைநிறுத்துவதையும், தவறான வரலாற்றின் அடிப்படையில் பள்ளிகளில் போட்டிகள் நடத்துவதையும் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தேவைப்படின் தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், எல்லைப் போராட்ட தியாகிகள் ஆகியோரைக் கொண்டு பேசி, தமிழ்நாடு நாள் எது என்பதைத் தீர்மானித்து உண்மை வரலாற்றை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:48:48 PM (IST)

ஆடிஷன் என்ற பெயரில் நடிகையிடம் அத்துமீறல் : போலி தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:22:47 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 4,41,667 மோதிரங்கள் கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 10:19:34 AM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:37:01 AM (IST)

மதுரை அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: நெல்லை ஆசிரியை உள்பட 6 பேர் பலி
செவ்வாய் 14, ஜூலை 2026 7:58:55 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.1.82 கோடியில் புதிய காத்திருப்புக் கூடம்: பணிகள் தீவிரம்
செவ்வாய் 14, ஜூலை 2026 7:35:12 AM (IST)


