» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 2வது முறையாக தனியார் பால், தயிர் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

திங்கள் 27, ஜூலை 2026 11:20:18 AM (IST)

தமிழகத்தில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாகத் தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதிலும் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியிலும் கடந்த ஓராண்டாகப் பால் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது.

இதன் காரணமாகத் தனியார் பால் நிறுவனங்கள் சந்தையில் தங்களது வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், பாலினைப் பெறவும் பால் உற்பத்தியாளர்களுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கொள்முதல் விலையை உயர்த்தத் தொடங்கின.

கொள்முதல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டித் தனியார் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. ஆரோக்யா, அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சன், ராஜ், சக்ரா, டோட்லா உள்ளிட்ட முன்னணித் தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. நடப்பாண்டில் மட்டும் தனியார் பால் விலை ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பால் உற்பத்தி மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்ட போதிலும், எரிபொருள் செலவு, கடை வாடகை, ஊழியர் ஊதியம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பால் முகவர்களுக்கான 'கமிஷன்' மற்றும் ஊக்கத்தொகையைத் தனியார் நிறுவனங்கள் உயர்த்த முன்வரவில்லை என முகவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு அபாயம்:

தனியார் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், குறைந்த விலையில் கிடைக்கும் அரசு ஆவின் பாலை நோக்கிப் பொதுமக்கள் அதிகளவில் மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், ஆவின் விநியோகத்தை தடையின்றி சீராக வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory