» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!

செவ்வாய் 28, ஜூலை 2026 7:33:52 AM (IST)

ayyaTherottamTcr.jpg

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில், 194-ஆவது வைகுண்டர் ஆண்டு ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் 11-ஆம் நாளான நேற்று (திங்கள்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் உகப்படிப்பு, பணிவிடை மற்றும் உச்சிப்படிப்பு ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிற்பகலில் அய்யா வைகுண்டர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பதியைச் சுற்றிப் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுருள் வைத்து வழிபட்டனர்.

தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியைச் சுற்றிப் பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை:

தேரோட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் தெரிவித்ததாவது: "அய்யா வைகுண்டர் அவதார நாள் விழாவிற்குத் தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அய்யாவழி பக்தர்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வசிப்பதால், வைகுண்டர் அவதார நாளில் மாநிலம் முழுவதும் அரசுப் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory