» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 3:58:35 PM (IST)

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று காலை சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். உதயநிதி ஸ்டாலின் கைதை எதிர்த்தும், கைது நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
உதயநிதி தரப்பு வாதம்: "முதல்வர் குறித்தோ அல்லது எந்தவொரு திரையுலகினர் குறித்தோ அவதூறான கருத்துகளை தெரிவிக்கவில்லை. பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேசப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காக அவரது பேச்சு திருத்தப்பட்டு தவறாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நாளை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், திட்டமிட்டே எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசுத் தரப்பு வாதம்: தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண், "உதயநிதி ஸ்டாலினைக் காவலில் வைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவிக்கப்படுவார்" என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், காவல்துறையின் விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:28:22 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல்: கீதா ஜீவன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 12:06:08 PM (IST)

யாகாவராயினும் நா காக்க.... உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:54:25 AM (IST)

மக்களுக்கு நிறைய செய்யுங்கள் என ரஜினிகாந்த் வாழ்த்தினார்: அமைச்சர் வன்னி அரசு தகவல்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:50:17 AM (IST)

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உதயநிதி கைது: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 11:17:10 AM (IST)


