» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

புதன் 2, ஆகஸ்ட் 2023 10:45:25 AM (IST)



மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடின. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. அதனால் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுகிற அணி தொடரையும் வெல்லும் என்ற நிலை. மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. அதனால் 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கு இந்தியத் தீவுகள் அணி விரட்டியது.

அந்த அணியின் பிரதான பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அலிக் அதானாஸ், 50 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். யானிக் கரியா (19 ரன்கள்), அல்சாரி ஜோசப் (26 ரன்கள்), குடாகேஷ் மோட்டி (39* ரன்கள்) எடுத்தனர். 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அதன் மூலம் 200 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வென்று, தொடரையும் இந்தியா வென்றது.

இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். முகேஷ் குமார் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள் மற்றும் உனத்கட் ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

முன்னதாக, இந்திய அணி இந்த போட்டியில் பேட் செய்த போது இஷான் கிஷன் மற்றும் ஷூப்மன் கில் இணைந்து 143 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன், 64 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் இதில் அடங்கும். ருதுராஜ் கெய்க்வாட், 8 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கில், 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து 65 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 35 ரன்களில் வெளியேறினார்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா, 52 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். மறுமுனையில் ஜடேஜா 8 ரன்கள் எடுத்திருந்தார். 50 ஓவர்களில் 351 ரன்களை இந்தியா எடுத்தது.

ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளையும் சேர்த்து 184 ரன்கள் எடுத்த இஷான் கிஷன், தொடர் நாயகன் விருதை வென்றார். கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் எடுத்த கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அடுத்ததாக இரு அணிகளும் நாளை (3-ம் தேதி) முதல் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory