» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது வெஸ்ட் இன்டீஸ்!

திங்கள் 14, ஆகஸ்ட் 2023 11:19:34 AM (IST)



இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் முதலிரு ஆட்டங்களிலும், இந்தியா அடுத்த இரு ஆட்டங்களிலும் வென்று சமநிலையில் இருக்க, வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் ஏதும் செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆபெட் மெக்காய், ஓடின் ஸ்மித் ஆகியோருக்குப் பதிலாக அல்ஸாரி ஜோசஃப், ரோஸ்டன் சேஸ் சோ்க்கப்பட்டிருந்தனா்.

டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். 3-ஆவது விக்கெட்டுக்கு பாா்னா்ஷிப் அமைத்த சூா்யகுமாா் யாதவ் - திலக் வா்மா கூட்டணி, 49 ரன்கள் சோ்த்தது.

இதில் திலக் வா்மா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, தொடா்ந்து வந்த சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். அடுத்து கேப்டன் ஹா்திக் பாண்டியாவும் 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

இந்நிலையில், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் சூா்யகுமாா். பின்னா் வந்தோரில் அா்ஷ்தீப் சிங் 1 சிக்ஸருடன் 8, குல்தீப் யாதவ் 0 ரன்களுக்கு அவுட்டாகினா். ஓவா்கள் முடிவில் யுஜவேந்திர சஹல் 0, முகேஷ் குமாா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ரொமேரியோ ஷெப்பா்ட் 4, அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18 ஓவா்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பிரண்டன் கிங் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். நிக்கோலஸ் பூரன் 47 ரன்கள் அடித்தாா்.இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங், திலக் வா்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனா். முன்னதாக, இந்தியா இன்னிங்ஸின்போது மழையால் ஆட்டம் இருமுறை தடைபட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory