» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய ஹாக்கி போட்டியில் ஜொலிக்கும் கோவில்பட்டி வீரர்கள்!

வியாழன் 17, ஆகஸ்ட் 2023 4:34:53 PM (IST)

கோவில்பட்டி: தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் கோவில்பட்டி வீரர்கள் கோலோச்சி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டியில் ஹாக்கி விளையாட்டு 1920-களில் தொடங்கி, நூற்றாண்டுகளைக் கடந்து தற்போதும் இளைஞர்களின் விருப்ப விளையாட்டாக உள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெகன், ராதாகிருஷ்ணன், ராமசாமி, அஸ்வின் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர்.

இலக்குமி ஆலை ஹாக்கி அணி இந்தியா மட்டுமல்லாது மலேசியா, இலங்கை, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று விளையாடி உள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர்கள் செந்தூர் பாண்டியன், அந்தோணி, இருளாண்டி, ஜெயராமன், ஜோதி, தன்ராஜ், கருப்பசாமி, நவநீதகிருஷ்ணன் போன்றோர் ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளுக்கு சிறப்பு அழைப்பு வீரர்களாக சென்று விளையாடி வந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் ஜூனியர், சப்-ஜூனியர், சீனியர் பிரிவுகளில் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர்கள் நிஷி தேவ அருள், திலிபன், மாரீஸ்வரன், அரவிந்த், வீராங்கனைகளில் மணிமொழி, மும்மன்ஜா, பாபிலா, முருகேஸ்வரி உள்ளிட்ட 43 பேர் தமிழக அணிக்காக விளையாடி உள்ளனர். இவர்களில், மாரீஸ்வரனுக்கு மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணி கிடைத்துள்ளது.

இந்தாண்டு ஒடிசாவில் கடந்த மே மாதம் நடந்த தேசிய சப் ஜூனியர் ஆண்கள்ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் கலந்துகொண்ட 18 பேரில் 13 பேர் கோவில்பட்டி வீரர்கள். அணியின் மேலாளராக கோவில்பட்டியின் முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் செயல்பட்டார்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெ.அருண், எம்.சுந்தர் அஜித் ஆகியோர் இந்திய சப்-ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் ஒடிசாவில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொள்கின்றனர்.

500 பேருக்கு வேலை: இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் சி.குருசித்ர சண்முக பாரதி கூறும்போது, "கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டின் தந்தை மருத்துவர் துரைராஜ். இவர்தான் கோவில்பட்டி வீரர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விளையாட ஏற்பாடு செய்து கொடுத்தார்.

உலக ஹாக்கி தந்தை என்று அழைக்கப்படும் மேஜர் தயான் சந்த் 1952-ம் ஆண்டு கோவில்பட்டி வ.உ.சி. அரசு பள்ளி மைதானத்தில் நடந்த கோடைகால ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்று, வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். தற்போது சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடந்ததன் மூலம் மாணவ, மாணவியரிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய மற்றும் அகில இந்திய பல்கலைக்கழக அளவில் ஹாக்கி விளையாடி வருகின்றனர். ஹாக்கி விளையாட்டின் மூலம் மத்திய, மாநில அரசுகளில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தற்போது தமிழக காவல்துறையில் மட்டுமே விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஹாக்கி வீரர்கள் காவல் உதவி ஆய்வாளர், காவலர் பணிகளில் அதிகம் இணைந்து வருகின்றனர். மற்ற துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் மூலம் இளம் ஹாக்கி வீரர்கள் அதிகளவு வருவார்கள்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory