» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

வியாழன் 16, நவம்பர் 2023 8:12:06 AM (IST)



உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முதல் ஓவரில் 2 பவுண்டரியுடன் இன்னிங்சை அட்டகாசமாக தொடங்கிய ரோகித் சர்மா, டிரென்ட் பவுல்ட், டிம் சவுதியின் ஓவர்களில் சிக்சர்களை விரட்டியடித்து வலுவான தொடக்கம் தந்தார். முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் (8.2 ஓவர்) திரட்டிய நிலையில் தொடக்க ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 47 ரன்களில் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) சவுதி வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். 

அடுத்து விராட் கோலி களம் புகுந்தார். டிம் சவுதியின் ஓவரில் சந்தித்த 2-வது பந்தில் எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பியதோடு தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். அவர் தொடக்கத்தில் நிதானத்தை கடைபிடித்தார். மறுமுனையில் வேகம் காட்டிய சுப்மன் கில் துரதிர்ஷ்டவசமாக 79 ரன்னில் இருந்த போது தசைப்பிடிப்பால் வெளியேறினார்.

இதையடுத்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு ெகாடுத்தார். ேபட்டிங்குக்கு சொர்க்கமான இந்த ஆடுகளத்தில் தங்கு தடையின்றி ரன்சேகரிப்பில் ஈடுபட்டனர். என்றாலும் மிடில் ஓவர்களில் கோலியிடம் சற்று தடுமாற்றம் தென்பட்டது. 28.1 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் 200-ஐ தொட்டது.

சதத்தை நோக்கி மட்டையை சுழற்றிய கோலி இந்த முறை அவசரமின்றி அதை அடைந்து விட வேண்டும் என்ற தீர்க்கமான எண்ணத்துடன் விளையாடினார். கடைசியில் சாதித்தும் காட்டினார். அவர் 106 பந்துகளில் தனது 50-வது சதத்ைத நிறைவு செய்ததும் ஒட்டுமொத்த ஸ்டேடியமே உற்சாக ெவள்ளத்தில் ஆர்ப்பரித்தது. தெண்டுல்கரின் 49 சத சாதனையை முறியடித்த நிலையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த தெண்டுல்கரும் கொண்டாடினார். அத்துடன் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் சதம் அடித்ததில்லை என்ற நீண்ட கால ஏக்கத்தையும் கோலி தணித்துக் கொண்டார்.

அணியின் ஸ்கோர் 327-ஆக உயர்ந்த போது கோலி 117 ரன்களில் (113 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் ஸ்ரேயாஸ் அய்யரின் ருத்ரதாண்டவத்தால் களம் மறுபடியும் சூடுபிடித்தது. ரச்சின் ரவீந்திரா, சவுதியின் ஓவர்களில் சிக்சர்களை தெறிக்கவிட்டு குதூகலப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 67 பந்துகளில் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார். முந்தைய ஆட்டத்திலும் அவர் சதம் எடுத்தது நினைவிருக்கலாம்.

நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் (70 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச்சில் சிக்கினார். அவருக்கு பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் (1 ரன்) கடைசி ஓவரில் ஆட்டமிழந்ததும் தசைப்பிடிப்பால் பாதியில் நடையை கட்டிய சுப்மன் கில் மீண்டும் களம் கண்டு இன்னிங்சைமுடித்து வைத்தார். இறுதி கட்டத்தில் லோகேஷ் ராகுலின் (39 ரன், 20 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பங்களிப்பு ஸ்கோரை 400-ஐ நெருங்க உதவியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி கான்வே (13 ரன்), ரச்சின் ரவீந்திரா (13 ரன்) இருவரது விக்கெட்டுகளையும் ஷமியின் வேகத்தில் பறிகொடுத்தது.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சனும், டேரில் மிட்செலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ஒரு வித நம்பிக்கையை கொண்டு வந்தனர். அதற்கு ஏற்ப இந்தியாவின் பீல்டிங் சொதப்பியது. வில்லியம்சனுக்கு 52 ரன்னில் எளிதான கேட்ச்சை முகமது ஷமி வீணடித்தார். ரன்-அவுட் வாய்ப்பையும் கோட்டை விட்டனர்.

இவர்கள் விளையாடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதற்றத்திற்கு உள்ளானார். அபாரமாக ஆடிய டேரில் மிட்செல் 6-வது சதத்தை அடித்தார். ஒரு வழியாக ஸ்கோர் 220 ஆக உயர்ந்த போது இந்த கூட்டணியை முகமது ஷமி உடைத்தார். வில்லியம்சன் 69 ரன்களில் (73 பந்து, 8 பவுண்டரி ஒரு சிக்சர்) ஷமியின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டாம் லாதமும் (0) வீழ்ந்தார். அதன் பிறகே நமது வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதன் பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது. ேடரில் மிட்செல் (134 ரன், 119 பந்து, 9 பவுண்டரி, 7 சிக்சர்) அடங்கியதும் அவர்களின் சவால் முடிவுக்கு வந்தது. அந்த அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தியா தொடர்ச்சியாக சுவைத்த 10-வது வெற்றி இதுவாகும். இந்திய தரப்பில் ேவகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

அத்துடன் கடந்த உலகக் கோப்பையில் அரைஇறுதியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கும் இந்தியா பழிதீர்த்துக் கொண்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இறுதி சுற்றை எட்டுவது இது 4-வது முறையாகும்.ஏற்கனவே 1983, 2003, 2011-ம் ஆண்டுகளிலும் இறுதிசுற்றை எட்டியிருந்தது. முந்தைய இரு உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு வந்திருந்த நியூசிலாந்து இந்த முறை அரைஇறுதியோடு மூட்டையை கட்டியிருக்கிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி வருகிற 19-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory