» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா

வெள்ளி 17, நவம்பர் 2023 8:18:59 AM (IST)



உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவை போராடி வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 2-வது அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. இதில் டாஸை வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பவுமா முதல் ஓவரிலேயே டக்-அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் குயின்டான் டிகாக்கும் (3 ரன்) நிலைக்கவில்லை. பின்னர் வந்த வீரர்கள் வான்டெர் டஸன் (6 ரன்), மார்க்ரம் (10 ரன்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். 12 ஓவர்களில் 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா நெருக்கடியில் தவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய கிளாசன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அரைசதத்தை நெருங்கிய கிளாசன் 47 ரன்னில் (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) போல்ட் ஆனார். அதன்பிறகு வந்த மார்கோ யான்செனும் அடுத்த பந்திலேயே எல்.பி.டபிள்யு. ஆகி வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறத்தில் டேவிட் மில்லர் நங்கூரமாக நின்று அணியை கரைசேர்க்க போராடினார். அவருக்கு ஜெரால்டு கோட்ஜி (19 ரன்), ரபடா (10 ரன்), கேஷவ் மகராஜ் (4 ரன்) சற்று ஒத்துழைப்பு அளித்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த டேவிட் மில்லர் 101 ரன்னில் (116 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்க அணி 212 ரன் சேர்த்தது.

தொடர்ந்து 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினர். சிக்சர்களாக விளாசிய டேவிட் வார்னர் 29 ரன்னில் (18 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) போல்ட் ஆனார். பின்னர் வந்த மிட்செல் மார்ஸ் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த டிராவிஸ் ஹெட் 62 ரன்னில் (48 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) போல்ட் ஆனார்.

தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் சுமித் 30 ரன்னிலும், லபுஸ்சேன் 18 ரன்னிலும், மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், ஜோஸ் இங்லிஸ் 28 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்காவுக்கு நம்பிக்கை பிறந்தது. எனினும் பின்னர் வந்த வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் (16 ரன்), கேப்டன் கம்மின்ஸ் (14 ரன்) நிதானமாக விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தனர். ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory