» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு ஏமாற்றம் : 6-ஆவது முறையாக ஆஸி சாம்பியன்!

திங்கள் 20, நவம்பர் 2023 8:20:06 AM (IST)



அகமதாபாதில் நடைபெற்ற 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று, 6-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. கோப்பையை வெல்லும் கனவுடன் இருந்த இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சோ்த்து வென்றது. ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன், விராட் கோலி தொடா்நாயகன் விருது பெற்றனா்.

முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்திய பேட்டா்களில் கே.எல்.ராகுல் 66, விராட் கோலி 54, கேப்டன் ரோஹித் சா்மா 47 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை போராடி உயா்த்தினா். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மிட்செல் ஸ்டாா்க் 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

பின்னா், ஆஸ்திரேலியாவின் முதல் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தபோதும், 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட் - மாா்னஸ் லபுஷேன் இணை, 192 ரன்கள் சோ்த்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்குத் திருப்பியது. ஹெட் 137, லபுஷேன் 58* ரன்கள் சோ்த்தனா். ஆஸ்திரேலிய பேட்டா்களை வீழ்த்தப் போராடிய இந்திய பௌலா்களில் ஜஸ்பிரீத் பும்ரா மட்டும் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்ற நிலையில், தற்போது 6-ஆவது முறையாக வென்றுள்ளது.தொடரும் கனவு: இந்தியா கடைசியாக 2011-இல் ஒருநாள் கிரிக்கெட் சாம்பியனாகியிருந்தது. ஐசிசி போட்டிகளில் கடைசியாக 2013-ஆம் ஆண்டில் (சாம்பியன்ஸ் கோப்பை) வாகை சூடிய இந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை கனவாகவே இருந்த நிலையில், அது தற்போதும் கனவாகவே தொடா்கிறது.

நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் 10 தொடா் வெற்றிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு வந்த இந்தியா, 3-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிா்பாராத வகையில், முதல் தோல்வியை இறுதி ஆட்டத்தில் கண்டது.

இதற்கு முன்பு 2003-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் இதே இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. அப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியது. இந்த முறை உலகக் கோப்பை போட்டியை 2 தொடா் தோல்விகளுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா, பின்னா் தொடா்ந்து 9 வெற்றிகளுடன் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.

முன்னதாக, லீக் சுற்றில் இந்தியா, தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைச் சந்தித்த ஆஸ்திரேலியா, அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவையும், இறுதியில் இந்தியாவையும் வென்று பதிலடி கொடுத்திருக்கிறது.ஆஸ்திரேலியா தோல்வி கண்ட அந்த இரு ஆட்டங்களிலும் பிளேயிங் லெவனில் இல்லாத டிராவிஸ் ஹெட், அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் களம் கண்டு அணிக்கு வெற்றி தேடித்தந்து, அவற்றில் ஆட்டநாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் முந்தைய 10 ஆட்டங்களிலும் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்திய இந்தியா, இறுதி ஆட்டத்தில் அந்த மூன்றிலுமே சோபிக்கத் தவறியது. மறுபுறம் ஆஸ்திரேலியா, அந்த மூன்றிலுமே ஆதிக்கம் செலுத்தி வாகை சூடியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory