» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அவுட் ஆகாமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய இஷான் : வீரேந்தர் சேவாக் விமர்சனம்
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:08:54 PM (IST)

மும்பைக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வீரர் இஷான் கிஷன், அவுட் கொடுக்கப்படாத நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. மூன்றாம் வரிசையில் இறங்கிய இஷான் கிஷன், தீபக் சாகரின் பந்துவீச்சில் தான் எட்ஜ் செய்ததாக நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்போது பந்தை கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பரோ, பந்தை வீசிய தீபக் சாகரோ அல்லது மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரரும் அம்பயரிடம் அவுட் கேட்கவில்லை.
மேலும் அப்போது அம்பயர் வைடு என சிக்னல் கொடுக்க தனது கையை உயர்த்தத் தயாரானார். அப்போது இஷான் கிஷன் தான் அவுட் ஆனதாக நினைத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார். அதைப் பார்த்தவுடன் அம்பயர் குழப்பமடைந்து அவுட் என அறிவித்தார். ஆனால் அதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த யாரும் அவுட் கேட்கவில்லை. இந்த விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும், ரீப்ளேயில் பந்து எட்ஜ் ஆகவில்லை எனத் தெரிய வந்தது.
அதனால் எதற்காக இஷான் கிஷன் அவசரப்பட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அவர் முந்தைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விசுவாசமாக நடந்து கொண்டார் எனவும், அம்பயர் பணம் வாங்கிவிட்டார் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வீரேந்தர் சேவாக் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். இது பற்றி அவர் பேசுகையில், "'பல சமயங்களில் நமது மனம் குறிப்பிட்ட அந்த தருணத்தில் வேலை செய்யாது. இது மூளை சரியாக வேலை செய்யாததைதான் குறிக்கிறது. குறைந்தபட்சம் நீங்கள் நின்று அம்பயரின் முடிவு என்ன எனத் தெரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம். அம்பயர் அவரது வேலையை செய்ய பணம் வாங்குகிறார்; அவரது வேலையை செய்ய விடுங்கள்.' என்று இஷான் கிஷனை விமர்சித்தார்.
மேலும் அவர், "உண்மையிலேயே இது எப்படி நடந்தது என்று எனக்குப் புரியவில்லை. அது எட்ஜ் ஆக இருந்தாலும் கூட, விளையாட்டு உணர்வின் காரணமாக இஷான் கிஷன் தாமாக வெளியேறினார் என நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அது அவுட்டும் இல்லை. அம்பயரும் அது அவுட்டா என உறுதியாக சொல்ல முடியாத நிலையில்தான் இருந்தார். திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




