» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா

திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)



பர்மிங்காமில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை துவம்சம் செய்து இந்தியா புதிய வரலாறு படைத்தது. இந்த மைதானத்தில் வெற்றி கண்ட முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றது.

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் ‘டிக்ளேர்’ செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் (24 ரன்), ஹாரி புரூக் (15 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான ேநற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மழை நீண்ட நேரம் பெய்தது. 

இதனால் 1½ மணி நேரம் பாதிப்புக்குள்ளானதுடன், 10 ஓவர்களை குறைக்க வேண்டியதாகி விட்டது. இதையடுத்து ேதால்வியில் இருந்து தப்பிக்க மேற்கொண்டு 80 ஓவர்களை சமாளித்தாக வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து தொடர்ந்து 2-வது இன்னிங்சில் ேபட் செய்தது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ‘ஸ்விங்’ தாக்குதலில் மிரட்டினார். அவரது பந்தில் ஆலி போப் (24 ரன்) போல்டானார். அவரது அடுத்த ஓவரில் ஹாரி புரூக்கும் (23 ரன்) வீழ்ந்தார். ‘இன் ஸ்விங்’ காக ஊடுருவிய பந்து புரூக்கின் காலுறையில் பட்டு எல்.பி.டபிள்யூ. ஆனார்.

83 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இங்கிலாந்து திண்டாடியது. இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் ஜேமி சுமித்தும் இணைந்து தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஸ்டோக்ஸ் சுழற்பந்து வீச்சில் வெகுவாக தடுமாறினார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாக்குப்பிடித்த ஸ்டோக்ஸ் (33 ரன், 73 பந்து, 6 பவுண்டரி) மதிய உணவு இடைேவளைக்கு முந்தைய ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் எல்.பி.டபிள்யூ,. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

தொடர்ந்து, இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஜேமி சுமித்தை (88 ரன், 99 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகாஷ் தீப் காலி செய்தார். அவரது பந்தில் இரு சிக்சர் விரட்டிய சுமித் அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் எஞ்சிய வீரர்களில் பிரைடன் கார்சின் (38 ரன்) பங்களிப்பு அவர்கள் 250-ஐ கடக்க மட்டும் உதவியது.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் எடுப்பது இதுேவ முதல் முறையாகும்.

பர்மிங்காம் மைதானத்தில் இதற்கு முன்பு எந்த ஆசிய அணியும் வென்றதில்லை. இந்திய அணி ஏற்கனவே இங்கு 8 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டிருந்தது. 58 ஆண்டுகளாக இங்கு வெல்ல முடியாத ஏக்கத்தை சுப்மன் கில் தலைமையிலான இளம் படை தணித்து புதிய சகாப்தம் படைத்துள்ளது. முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory