» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!

திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)



ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். போட்டியின் 6-வது நாளான நேற்று துபாயில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. முதல் 2 ஓவருக்குள் அந்த 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியினர் பாகிஸ்தான் ரன்வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியில் பர்ஹான் 40 ரன் (44 பந்து) எடுத்தார். ஷகீன்ஷா அப்ரிடி 33 ரன்களுடன் (16 பந்து) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். இது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த செயலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஷின் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், "விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனி வரும் காலங்களில் வெற்றிகள் அனைத்து அணிகளாலும் கண்ணியத்துடன் கொண்டாடப்படும் என்று நம்புவோம்” என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!

வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

Sponsored Ads






Tirunelveli Business Directory