» சினிமா » செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் : ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டாளர்!

திங்கள் 11, செப்டம்பர் 2023 11:25:24 AM (IST)

சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் நெரிசலில் சிக்கியதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் பகுதியில் நடக்கவிருந்தது. ஆனால், மழை காரணமாக அந்த இசைக்கச்சேரி தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் செப்.10 (நேற்று) ஞாயிறு மாலை நிகழ்ச்சி நடைபெறும் என மறுதேதி குறித்த அறிவிப்பை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருந்தார்.

அதேபோல், நேற்று சென்னை கிழக்கு சாலையில் உள்ள பனையூருக்கு அருகே நடைபெற்றது. இதற்காக வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். ஆனால், அங்கு ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். காரணம், சரியான பார்க்கிங் வசதி இல்லாததால் பல மணி நேர காத்திருக்குப் பின்பே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றுள்ளனர். 

ஆனால், ரூ.5,000 மதிப்புள்ள டிக்கெட் இருந்தும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. மேலும், கூட்டத்திற்குள் சிக்கி வெளியே வர முடியாமல் பலரும் திணறி உள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனம் எழுப்பிய நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் வீடு திரும்பிய நிகழ்வுக்கு முழு பொறுப்பையும் தாங்களே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர். ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ நிறுவனத்தின் ட்வீட்டை ஏ.ஆர்.ரஹ்மானும் ரீட்வீட் செய்துள்ளார்.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory