» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு

ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:52:38 AM (IST)

சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகப்புரம் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர்களின் பணிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 2025-26-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு சன்னிதானத்தில் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் நேர்காணல் மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு சன்னிதானத்தில் வைத்து நேற்று காலையில் உஷ பூஜைக்கு பிறகு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் குலுக்கல் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

பந்தளம் கொட்டாரம் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கசுவப் வர்மா சபரிமலைக்கான புதிய மேல்சாந்தியை குலுக்கல் மூலம் தேர்வு செய்தார். மாளிகப்புரம் மேல்சாந்தியை பந்தளம் கொட்டாரம் குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஆர்.மைதிலி வர்மா குலுக்கல் மூலம் தேர்வு செய்தார். அதில் சபரிமலை புதிய மேல்சாந்தியாக திருச்சூர் சாலக்குடி வாசுபுரத்தை சேர்ந்த ஈ.டி.பிரசாத்தும், மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக கொல்லம் மய்ய நாட்டை சேர்ந்த எம்.ஜி.மனு நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், சிறப்பு கமிஷனர் ஜெய கிருஷ்ணன், ஐகோர்ட்டு சிறப்பு கண்காணிப்பாளர் ராமசந்திரன் நாயர், தேவஸ்தான உறுப்பினர்கள் அஜிகுமார், சந்தோஷ், தேவஸ்தான கமிஷனர் சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய மேல்சாந்திகள் அடுத்த மாதம் 16-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் தந்திரி தலைமையில் நடைபெறும் சிறப்பு பூஜையின்போது தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மந்திரம் சொல்லி பொறுப்பேற்கிறார்கள். இவர்களது பணிக்காலம் ஒரு வருடம் ஆகும்.

இதற்கிடையே ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. 22-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனத்திற்காக சபரிமலை வருகிறார். இதைதொடர்ந்து சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory