» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வெள்ளி 31, அக்டோபர் 2025 5:15:32 PM (IST)

சித்தூர் மாநகராட்சி முன்னாள் முதல் மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் நாயுடு இரட்டை கொலை வழக்கில் 10 ஆண்டுகள் விசாரணைக்கு பின், குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சித்தூர் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாநகராட்சியின் முதல் மேயர் அனுராதா, அவரது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். உடன் இருந்த அவரது கணவர் கட்டாரி மோகனை, கடந்த 2015 நம்பர் 17 ஆம் தேதி முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல் அனுராதாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததுடன் தடுக்க வந்த மோகனையும் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியது.

இதில், மேயர் அனுராதா சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். அவரது கணவர் மோகன் பலத்த காயமடைந்தார். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டாரி மோகனின் உடலில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்தார்.

இந்த இரட்டைக் கொலை, மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேயரையும் அவரது கணவரையும் தாக்கிய ஐந்து பேரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மூவர் போலீஸாரிடம் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, அவர்களது உறவினர் சந்திரசேகர் என்கிற சின்ட்டு மற்றும் வெங்கடாசலபதி என்கிற மூலபாகுலு வெங்கடேஷ் ஆகியோர் குடும்பப்பகை காரணமாக அவர்களை கூலிப்படை வைத்துக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், அவர்கள் ஜெயபிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்த நிலையில், சித்தூரில் உள்ள 4-வது கூடுதல் நீதிபதி யுகாந்தர் முன்னிலையில் சின்ட்டு சரணடைந்தார்.

இந்த கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு உதவி செய்தல், ஆயுதங்களை வழங்கியது மற்றும் முக்கிய குற்றவாளிகளுக்கு தங்குமிடம் அளித்தது உள்பட மொத்தம் 27 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக சித்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வழக்கு விசாரணையின் போது இறந்தனர் மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அவர்களில், ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றவாளி ஒருவர் இறந்துவிட்டார், மேலும் காசரம் ரமேஷ் என்பவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் மீதமுள்ள 18 குற்றவாளிகளை விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் ஜாமீன் பத்திரங்கள் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று தீர்ப்பளித்தது. பத்து ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது 122 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

பத்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த சித்தூர் மாநகராட்சி முதல் மேயர் அனுராதா மற்றும் அவரது கணவர் கட்டாரி மோகன் நாயுடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சின்ட்டு நாயுடு(சந்திரசேகர்), வெங்கடாசலபதி, ஜெய்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷ் ஆகியோருக்கு கொலைக் குற்றப் பிரிவில் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு சித்தூர் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்புக்கு முன்னதாக, சித்தூரில் மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நீதிபதி மற்றும் வழக்கில் ஆஜரான வழக்குரைஞர்களின் வீடுகளைச் சுற்றி அதிகளவில் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தனர்.

முன்னெச்சரிக்கையாக காவல் சட்டப் பிரிவு 30 பயன்படுத்தப்பட்டதாகவும், சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சித்தூர் டிஎஸ்பி டி.சாய்நாத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory