» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:40:41 AM (IST)
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மனதின் குரல் (மன் கீ பாத்) எனப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பல்வேறு அம்சங்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
அந்தவகையில் நவம்பர் மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் பேசியதாவது: இந்த ஆண்டின் காசி-தமிழ் சங்கமம் ‘தமிழ் கற்க - தமிழ் கற்கலாம்’ என்ற சுவாரஸ்யமான கருப்பொருளை கொண்டிருக்கிறது. உலகின் மிகவும் பழமையான மொழியும், உலகின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்றும் சங்கமிக்கும் நிகழ்வு அது.
தமிழ் மொழியுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக காசி தமிழ் சங்கமம் மாறியிருக்கிறது. காசியை சேர்ந்த மக்களிடம் எப்போது பேசினாலும், அவர்கள் காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக எப்போதும் கூறுவார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் அவர்கள் சில புதியவை மற்றும் புதிய மக்களை சந்திக்கிறார்கள். அந்தவகையில் தமிழ்நாட்டை சேர்ந்த தங்கள் சகோதர-சகோதரிகளை உற்சாகமாக வரவேற்க வாரணாசி மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
எனவே நீங்கள் அனைவரும் காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதில் தமிழ் மொழியை கற்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அத்துடன் பிற தளங்களையும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அது ஒரே பாரதம்-சிறந்த பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தும்.
கடற்படை கப்பல் ஒன்றுக்கு ஐ.என்.எஸ். மாஹே என பெயரிட்டிருப்பதன் மூலம் புதுச்சேரி மற்றும் மலபார் கடற்கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய கடற்படை தன்னிறைவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவது பெருமைக்குரியதாகும்.
ஜி20 உச்சி மாநாட்டுக்காக சமீபத்தில் தென்ஆப்பிரிக்கா சென்றபோது அந்த நாட்டு அதிபருக்கு நடராஜரின் ஒரு வெண்கல சிலையை பரிசளித்தேன். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் கலாசார பாரம்பரியத்தில் வேரூன்றிய சோழர் கால கைவினைத்திறனுக்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு ஆகும்.
இதைப்போல கனடா பிரதமருக்கு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரின் வெள்ளி குதிரைச்சிலை ஒன்றை பரிசளித்தேன். ஜப்பான் பிரதமருக்கு பரிசாக வழங்கிய புத்தர் சிலை, தெலுங்கானா மாநிலம் கரீம்நகரின் புகழ்பெற்ற கைவினைகளின் நுணுக்கங்களைக் காட்சிப்படுத்துகிறது.
ஆஸ்திரேலிய பிரதமருக்கு கேரளாவின் மன்னாரில் இருந்து வந்த ஒரு அழகிய கைவினைப் பொருளான பித்தளை உருளியை பரிசாக அளித்தேன். இவையெல்லாம் நமது கைவினைஞர்களின் திறமைக்கு உலகளாவிய தளத்தை வழங்குவதும் எனது நோக்கமாக இருந்தது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியல் சாசன தினக்கொண்டாட்டம், அயோத்தி ராமர் கோவிலில் காவி கொடியேற்றியது போன்றவை நவம்பர் மாதத்தின் குறிப்பிடத்தக்க உத்வேகமான நிகழ்வுகளாக இருந்தன.
இந்தியாவின் விண்வெளி சூழலுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஸ்கைரூட்டின் இன்பினிட்டி வளாகம் கடந்த வாரம்தான் திறக்கப்பட்டது. இது இந்திய இளைஞர் சக்தியின் எதிரொலி ஆகும்.
இஸ்ரோ ஏற்பாடு செய்த ஒரு தனித்துவமான டிரோன் போட்டி தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பார்த்தேன். அதில் நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக நமது ‘ஜென் சி’ தலைமுறையினர் செவ்வாய் கிரகத்தைப் போன்ற சூழ்நிலையில் டிரோன்களை பறக்க முயற்சிப்பதை பார்த்தேன்.
இதில் டிரோன்கள் விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட பல சுற்று தோல்விகளுக்குப்பின் அந்த இளைஞர்கள் வெற்றியை ருசித்தனர். தோல்விக்குப்பின் கிடைக்கும் வெற்றி புதிய நம்பிக்கையை வழங்கும். அதே தீப்பொறியைத்தான் அந்த வீடியோவில் நமது இளைஞர்களின் கண்களில் பார்த்தேன். நமது இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்புதான் வளர்ந்த பாரதத்தின் மிகப்பெரும் வலிமைகளில ஒன்றாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 12:10:50 PM (IST)

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரம் : சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு பதிவு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:47:46 AM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
வெள்ளி 28, நவம்பர் 2025 5:05:40 PM (IST)

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்: தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:15:36 PM (IST)




