» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: ஒரே நாளில் 620 ராணுவ வீரர்கள் பலி!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:04:12 PM (IST)
உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த ஒரே நாளில் 620 ராணுவ வீரர்கள் பலியானதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைய முயன்று வருகிறது. ஆனால் அவ்வாறு இணைந்தால் தங்களது நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது. அதனை மீறி நேட்டோவில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது ரஷியா 2022-ல் போர் தொடுத்தது.
கடந்த 2½ ஆண்டுகளாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. எனினும் போர் முடிந்தபாடில்லை. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை உக்ரைனுக்கு ஆதரவாக ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
மேலும் உக்ரைனுக்கு ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளையும் அந்த நாடுகள் வழங்கி வருகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் போரில் இன்னும் தாக்குப்பிடித்து நிற்கிறது. இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷியா சரமாரி ஏவுணை தாக்குதல் நடத்தியது. அவற்றுள் பல ஏவுகணைகள் உக்ரைன் வான்பாதுகாப்பு படையினரால் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன.
எனினும் இந்த தாக்குதலில் உக்ரைனில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 620 ராணுவ வீரர்கள் பலியானதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் தரப்பில் இதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.