» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் ராணுவ ஜெனரல் பதவி நீக்கம், கைது: நாட்டை விட்டு வெளியேற தடை!

வியாழன் 8, ஆகஸ்ட் 2024 11:36:01 AM (IST)

வங்கதேச ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜியாவுல் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மேஜர் ஜெனரல் ரித்வானுர் ரகுமான் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார்.

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதனை எதிர்த்து, மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கடந்த ஜூலையில் 300 பேர் பலியானார்கள். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி போராட்டம் தீவிரமடைந்ததில், ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். எனினும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. ஹசீனா, சகோதரியுடன் நாட்டில் இருந்து தப்பி சென்றார். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதன்பின்பும், அந்நாட்டில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சூழலில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களில் 400 காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர். 50 போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், வங்கதேச ராணுவத்தின் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மாற்றப்பட்டனர். இதில், மேஜர் ஜெனரல் ஜியாவுல்லும் அடங்குவார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் ஜியாவுல் அசான், 1991-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி வங்கதேச ராணுவத்தில் இணைந்து அதிகாரியானார். அவருக்கு 2010-ல் வங்கதேச போலீஸ் பதக்கமும், 2011-ல் ஜனாதிபதி போலீஸ் பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்றார். இதற்காக, டாக்கா விமான நிலையத்திற்கு நேற்றிரவு சென்ற அவர், எமிரேட்ஸ் 585 என்ற விமானத்தில் புறப்பட தயாரானார்.

ஆனால், விமான ஓடுபாதையில் சென்ற விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி கொண்டு வரப்பட்டது. நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் டாக்கா கன்டோன்மெண்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உளவு அமைப்பின் இயக்குநராக பதவி வகித்த அவர், 2022-ம் ஆண்டு முதல் தேசிய தொலைதொடர்பு கண்காணிப்பு மைய இயக்குநர் ஜெனரலாக பதவியில் இருந்து வந்துள்ளார். தொலைபேசி அழைப்புகள், இ-மெயில்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகள் போன்ற மின்னணு தகவல் தொடர்புகளை இடைமறித்து கண்டறியும் பொறுப்பை இந்த மையம் மேற்கொள்ளும்.

அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அவருக்கு பதிலாக மேஜர் ஜெனரல் ரித்வானுர் ரகுமான் அந்த பதவியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜியாவுல் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory