» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் மிக மோசமான நிலநடுக்கம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

திங்கள் 1, செப்டம்பர் 2025 4:43:39 PM (IST)



ஆப்கானிஸ்தானில்ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறுகையில், "குனார் மாகாணத்தில் மட்டும் 800 பேர் உயிரிழந்துள்ளனர். 2500 பேர் காயமடைந்துள்ளனர். நாங்கர்ஹர் பகுதியில் 12 பேர் உயிரிழந்தனர். 255 பேர் காயமடைந்தனர். எண்ணற்ற வீடுகள் தரைமட்டமாயின” என்றார்.

ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ குத்ரேஸ் கூறுகையில், "ஆப்கானிஸ்தானை தாக்கியுள்ள கடுமையான பூகம்பத்தால் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2023-ல் ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,500 பேர் உயிரிழந்தனர். 63,000 பேர் வீடுகளை இழந்தனர். அதற்கு முன்னதாக ஜூன் 2022-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1000 பேர் உயிரிழந்தனர்.

ஏற்கெனவே, போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான சிக்கல்கள் மிகுந்துள்ளன. தலிபான் ஆட்சியில் வெளிநாட்டு நிதிகள் குறைந்துள்ளன. மோசமான பொருளாதார நிலையால் கடுமையான நெருக்கடியில் வாழும் மக்களுக்கு இதுபோன்ற இயற்கை பேரிடர்கள் இன்னும் துயரம் தான்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory