» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!

சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி கலிஃபோர்னியா, நியூயார்க் உள்பட 20 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்கள், திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்களை எச்​1பி விசா மூலம் தங்கள் நிறுவனத்தில் பணியமர்த்தி வந்தன. இந்த விசாவுக்கான கட்டணம் ரூ. 1,80,000 (2,000 அமெரிக்க டாலர்) முதல் ரூ. 4,52,000 (5,000 அமெரிக்க டாலர்) வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ரூ.9 கோடி​யில் (10 லட்சம் அமெரிக்க டாலர்) அமெரிக்க குடி​யுரிமை பெறும் கோல்டு கார்டு விசா திட்​டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்​டனில் கடந்த புதன் கிழமை தொடங்​கி​வைத்​தார்.

அப்​போது பேசிய அவர், ‘‘அமெரிக்​கா​வின் வார்ட்​டன், ஹார்​வர்​டு, எம்​ஐடி பல்​கலைக்​கழகங்​களில் கல்வி பயிலும் இந்​தி​யா, சீனா, பிரான்ஸ் உள்​ளிட்ட வெளி​நாடு​களைச் சேர்ந்த மாணவர்​கள், படிப்பை நிறைவு செய்த பிறகு அவர​வர் சொந்த நாடு​களுக்கு திரும்​பு​கின்​றனர். புதிய கோல்டு கார்டு விசா திட்​டத்​தின் மூலம் வெளி​நாடு​களை சேர்ந்த திறமை​யான மாணவ, மாண​வியர் நிரந்​தர​மாக அமெரிக்​கா​வில் தங்கி பணி​யாற்ற முடி​யும்.

இதன்​மூலம் அமெரிக்கா​வுக்கு தேவை​யான திறன்​வாய்ந்த பணி​யாளர்​கள் மற்​றும் தொழில​திபர்​கள் கிடைப்​பார்​கள். அதோடு ரூ.9 கோடி​யில் கோல்டு கார்டு விசா பெறு​வதன் மூலம் அமெரிக்க அரசின் கரு​வூல​மும் நிரம்​பும். சம்​பந்​தப்​பட்ட அமெரிக்க நிறு​வனங்​களே விசா கட்​ட​ணத்தை செலுத்தி உயர்​தொழில்​நுட்ப திறன்​ வாய்ந்த வெளி​நாட்டு பணி​யாளர்​களை தக்க வைக்க முடியும்’’ என தெரிவித்திருந்தார்.

இந்த கோல்டு கார்டு விசா திட்டம் குறித்த விவரங்களைத் தெரிவித்த வெள்ளை மாளிகை அதி​காரி​கள், ‘‘விசாவுக்​கான விண்​ணப்ப கட்​ட​ணம் ரூ.13 லட்​சம் ஆகும். விண்​ணப்​ப​தா​ரர் குறித்து முழு​மை​யான விசாரணை நடத்​தப்​படும். அவரிடம் நேர்​காணலும் நடத்​தப்​படும். விண்​ணப்​பம் ஏற்​கப்​பட்​டால் கோல்டு கார்டு விசா வழங்​கப்​படும். இந்த விசாவை பெற தனி​நபருக்கு ரூ.9 கோடி (10 லட்​சம் டாலர்) கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது. இதே விசாவை நிறு​வனங்​கள் பெற ரூ.18 கோடி (20 லட்​சம் டாலர்) கட்​ட​ணம் செலுத்த வேண்​டும்.

தற்​போதைய நிலை​யில் அமெரிக்​கா​வில் வசிக்​கும் வெளி​நாட்​டினர் கிரீன் கார்டு பெற 15 ஆண்​டு​கள் வரை காத்திருக்க நேரிடு​கிறது. ஆனால் கோல்டு கார்டு விசாவை 4 மாதங்​களில் பெற முடி​யும். கிரீன் கார்டு வைத்​திருப்​போருக்கு கிடைக்​கும் அனைத்து சலுகைகளும் கோல்டு கார்டு விசா பெறுவோருக்​கும் கிடைக்​கும்’’ என தெரிவித்தனர்.

டொனால்டு டிரம்ப்பின் இந்த திட்டத்தை எதிர்த்து கலிஃபோர்னியா, நியூயார்க், மாசசூசெட்ஸ், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி, வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்கள் பாஸ்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது: எச்1பி விசா கட்டணம் 2,000 டாலர் முதல் 5,000 டாலர் வரை இருந்த நிலையில், தற்போதைய கோல்டு கார்டு திட்டத்தால் கட்டணங்கள் பல மடங்கு உயர்கின்றன. இவ்வாறு கட்டணத்தை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு கிடையாது. இது மத்திய சட்டத்தை மீறும் செயல். விசா நடைமுறைகளை நிர்வகிப்பதற்கான செலவை ஈடு செய்யத் தேவையான கட்டணங்களை மட்டுமே குடியேற்ற அதிகாரிகள் வசூலிக்க முடியும்.

எச்1பி விசா திட்டம், அமெரிக்க நிறுவனங்கள் சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது. கலிஃபோர்னியாவில் தங்கள் தலைமையகத்தை அமைத்துள்ள பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள், எச்1பி விசா பெறும் ஊழியர்களை பெரிதும் சார்ந்துள்ளது. 

கோல்டு கார்டு விசாவுக்கு ஒரு மில்லியன் டாலர் கட்டணம் நிர்ணயிப்பது கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற முக்கிய சேவைகளை வழங்குபவர்களுக்கு தேவையற்ற நிதிச் சுமையை உருவாக்கும். மேலும், இது தொழிலாளர் பற்றாக்குறையை மோசமாக்கி, சேவைகளை பாதிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory