» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது அமெரிக்கா: கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% உயர்வு!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:43:28 AM (IST)



ஈரான் உடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரசீக வளைகுடாவின் முக்கிய நீர்ச்சந்தியான 'ஹார்முஸ்' ஜலசந்தியை மூடிவிட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் பதற்றம் நீடித்து வந்தது. இடையில் இரு வார கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு, கடந்த 11-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மூடும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவின்படி, அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 13-ம் தேதி காலை 10 மணி முதல் (இந்திய நேரப்படி இரவு 7:30 மணி) ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இது குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அனைத்துக் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும். மற்ற நாடுகளின் கப்பல்கள் வழக்கம் போல அந்தப் பாதையைக் கடந்து செல்லலாம்.

தடையை மீறி வரும் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன், ஜெரால்டு ஆர் போர்டு, ட்ரிபோலி உள்ளிட்ட 23 போர்க்கப்பல்கள் மற்றும் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதியில் முகாமிட்டுள்ளன. இவை தவிர 10 கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஜப்பானில் இருந்து வரும் மேலும் இரண்டு கப்பல்கள் கடல் பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 96.57 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், நேற்று 105 டாலராக அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த முற்றுகை தொடர்ந்தால், எண்ணெய் விலை பேரலுக்கு 140 முதல் 150 டாலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவிற்குப் பாதிப்பு உண்டா?

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தப் பதற்றம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது பதாலி கூறுகையில்:  "இந்தியா ஈரானின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு. இந்தியக் கப்பல்களுக்கு நாங்கள் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில்லை. தற்போதைய சூழலிலும் இந்தியக் கப்பல்கள் எவ்வித இடையூறுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படும்." என்று தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஈரான் நாட்டு எண்ணெய் கப்பல்களை மட்டுமே குறிவைப்பதாக அறிவித்துள்ளதால், வளைகுடா நாடுகளிலிருந்து வரும் இந்தியக் கப்பல்களுக்குத் தற்போதைக்குத் தடை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory