» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வளைகுடாவில் உச்சக்கட்ட போர் பதற்றம்: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியா கவலை!

வியாழன் 9, ஜூலை 2026 10:33:33 AM (IST)

ShipAttacked.jpg

மத்திய கிழக்கில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தத் தாக்குதல்கள் அமைதியைக் குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதி காத்துப் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றும், பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் பதிலடித் தாக்குதலைத் தொடுத்தது. சுமார் 40 நாட்கள் நீடித்த தீவிரப் போருக்குப் பின், கத்தார், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆகியோர் 14 அம்சங்கள் கொண்ட தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சுமூக நிலை திரும்பி வந்த சூழலில், ஹார்முஸ் நீரிணையில் குறிப்பிட்ட பாதையை மீறிச் சென்ற வணிகக் கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் ரேடார் அமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், அணுமின் திட்டம் அமைந்துள்ள புஷேர் பகுதி மற்றும் காவல்படைப் படகுகள் மீது பயங்கரத் தாக்குதலை நடத்தியது.

துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானுடன் செய்து கொண்ட போர் நிறுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக அறிவித்தார். "என்னைப்பொறுத்தவரைப் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது; அமெரிக்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையைத் தொடரலாம், ஆனால் அது நேரத்தை வீணடிக்கும் செயலே” என்று குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான தாக்குதல்களை நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாகவும் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கக் கடற்படை தளம், குவைத்தில் உள்ள ராணுவத் தளங்களில் ஈரானும் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தொடர் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory