» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காரையார் ஆடி அமாவாசை திருவிழா: பணியாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
புதன் 7, ஆகஸ்ட் 2024 4:37:07 PM (IST)
காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பான வகையில் நடைபெற உழவார பணியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், காரையார் அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா 2.8.2024 முதல் 6.8.2024 வரை நடைபெற்றது. விழாவில் சுமார் ஒரு இலட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டு ஆயிரக்கணக்கானோர் தங்கிச் சென்றனர். அரசின் சிறப்பான ஏற்பாடுகளாலும் பொதுமக்களின் சிறந்த ஒத்துழைப்பு காரணமாகவும், விழா சிறப்புற நடைபெற்றது.
சிறந்த முறையில் ஒருங்கிணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் அறங்காவலர்கள், வி.கே.புரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி, அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், அகஸ்தியர்பட்டி கிராம ஊராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, அரசு போக்குவரத்து கழகம், சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், நீர்வளத்துறை, BSNL மற்றும் மணிமுத்தாறு சிறப்பு காவல்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களுக்கும் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குநர் M.இளையராஜா, விழா கண்காணிப்பு அலுவலரான சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், மற்றும் அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஸ்குமார் ஆகியோருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
இன்று (7.8.2024) நடைபெற்ற திருக்கோவில் உழவார பணியில் அனைத்து அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். திருவிழாவில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகை தந்த பக்தர்களுக்கு 5000 பூ மற்றும் கனி மரக்கன்றுகள், விதைப்பந்துகள் மற்றும் மஞ்சள்பை, திருக்கோவில் பிரசாதத்துடன் வழங்கப்பட்டது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இனி வரும் ஆண்டுகளில் கூடுதலாக மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கைப்படி இனிவரும் ஆண்டுகளில் கூடுதலாக மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பொதுமக்களின் சிறப்பான ஒத்துழைப்பு காரணமாக கோவில் சுற்றுப்புற பகுதி மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டிருந்ததுடன் குப்பையின் அளவும் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 17 டன் அளவு குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இதுவரை சுமார் 6.5 டன் அளவிற்கு அகற்றப்பட்டு, இன்னும் சுமார் 1.5 டன் அளவிலான குப்பைகள் நாளைக்குள் முழுமையாக எடுத்து செல்லப்படும். இந்த ஆண்டில் குப்பையின் அளவு கடந்த ஆண்டை விட பாதிக்கும் குறைவான குப்பைகளே சேர்ந்துள்ளது. இதற்கு வனத்துறை உள்ளிட்ட துறைகளின் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், பொதுமக்களின் சிறப்பான ஒத்துழைப்புமே காரணமாகும்.
கோவில் நிர்வாகம், மணிமுத்தாறு பேரூராட்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி இணைந்து கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மை பணிகள் மிகச்சிறப்பாக செய்யப்பட்டது. திருவிழா நடைபெற்ற நாட்களில் எவ்விதமான குப்பைகளும் இல்லாமல் மிகவும் சுகாதாரமான நிலையில் இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
130 மொபைல் கழிவறைகள் மற்றும் 97 நிரந்தர கழிவறைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டது. கோவில் பகுதிகளிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் குடி தண்ணீர் டேங்குகள் நிறுவப்பட்டு அனைவருக்கும் குடி தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டது. பி.எஸ்.என்.எல் டவர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வருவதற்கேற்ப 393 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு தனியாக பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். இவை காவல்துறையால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு அனுப்பப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைந்தது. திருக்கோவில் சார்பில் பக்தர்களுக்கு குறைந்த விலையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளதால் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் நியாயமான வாடகையில் குடில்கள் வழங்கப்பட்டதை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல்துறை மூலமாக குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் அலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய ‘டேக்” கட்டப்பட்டது. மருத்துவக்குழுவினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டு சிறு சிறு காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவம் பார்க்கப்பட்டது.
திடீர் கனமழை வாய்ப்பு மற்றும் நிலச்சரிவு கண்காணிப்பு தொடர்பான அரசின் அறிவுரைகளின்படி, மாவட்ட அளவிலான முக்கிய அலுவலர்கள் தொடர்ந்து வனப்பகுதியில் முகாமிட்டு பணிகளை கண்காணித்து வந்தனர். இவற்றை கருத்தில்கொண்டு கூடுதல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேற்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆற்றில் இறங்குபவர்களை முறையாக கண்காணித்து தீயணைப்பு துறையினர் மிகச்சிறப்பாக பணியாற்றியதன் காரணமாக பெரிய விபத்துக்கள் ஏதுமின்றி திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இவ்வாறு சிறப்பாக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து சீரிய முறையில் ஒத்துழைப்பு வழங்கிய பக்தர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.