» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்: தமிழ்நாடு அரசிற்கு விவசாயிகள் நன்றி!

வெள்ளி 21, மார்ச் 2025 5:42:31 PM (IST)



திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்மாவட்ட விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றமைக்காக விவசாயிகள் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்தனர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (21.03.2025) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது "திருநெல்வேலி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் 15.70 மி.மீ மழை பெய்துள்ளது இது மாவட்டத்தின் வளமையான மழையளவான 30.2 மி.மீ-ஐ விட 48.01 சதவிகிதம் குறைவாகும். மேலும் நடப்பு மார்ச் 2025 மாதத்தில் 19.03.2025 ம் தேதி வரை 80.60 மி.மீ மழை பெய்துள்ளது, இது மார்ச் மாத வளமையான மழையளவான 41.30 மி.மீ விட 95.15 சதவிகிதம் அதிகமாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை 74525 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன, நடப்பாண்டு பெய்த வளமான மழையளவு மற்றும் அணைகளில் நீர்திறப்பு ஆகியவற்றால் சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது நடப்பாண்டு 5314,80 ஹெக்டேர் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற 06.03.2025 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பாக 12 தென் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்து கொண்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நகர்ப்புற மேம்பாட்டு மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திட ஆலோசனை வழங்கி வழி நடத்திய மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்த நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்ச்சியினை மிக சிறப்பாக நடத்திட எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய மதிப்பிற்குரிய பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இக்கூட்டத்தினை சிறப்பான முறையில் நடத்திட ஒத்துழைப்பு நல்கிய 12 மாவட்ட விவசாயிகள் அனைவருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் பெரும்பான்மையான விவசாயிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, மண்வளத்தினை மேம்படுத்திட பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்குதல், நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வது, டெல்டா பகுதி விவசாயிகள் வழங்கப்படுவது போன்று டெல்டா இல்லாத மாவட்டத்திற்கும் நெல் சாகுபடியினை ஊக்குவிக்கும் தொகுப்பு வழங்குதல், விவசாயிகளுக்கு தேவைப்படும் வேளாண் இயந்திரங்களுக்கான மானியத்தினை அதிகரித்து வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் 15.03.2025 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு 49,481 பி.எம்.கிசான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், இதுவரை சுமார் 22,094 பி.எம்.கிசான் மற்றும் இதர விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மானுார் வட்டாரத்தில் சென்ற 05.01.2024 அன்று எதிர்பாராத காலத்தில் பெய்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட 31.69 ஹெக்டேர் நெல் பயிர் சேதத்திற்கான நிவாரணத் தொகை அரசிடமிருந்து வரபெற்று ரூ.5.50 இலட்சம் மானுார் வட்டத்திற்கு விடுவிக்கப்பட்டு தொகையானது பாதிப்புக்குள்ளான 135 விவசாயிகளுக்கு அவர்களின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

62 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்திட உத்தரவிடப்பட்டு, 47 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் TNCSC (35) & NCCF (12) திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து 11096.24 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது நெல்லை இந்நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையுமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது,

நடப்பாண்டில் மார்ச் மாதம் 20-ம் தேதி வரை கூட்டுறவுத்துறை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் கடனாக ரூ. 778.35 கோடி கடன் 36426 விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை மூலம் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறை மூலம் 5330 விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை மூலம் ரூ.41.30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் தொடர்ந்து விவசாயிகளுக்கு தங்குதடையின்றி கடன் உதவி கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் சென்ற கார்பருவத்தில் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 127 விண்ணப்பங்களுக்கு ரூ.166701/- இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டு அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் 2311 ஏக்கர் பரப்பிற்கு தேவையான பசுந்தாள் உர விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2024-25-ன் கீழ் 38 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 41,120 பயனாளிகள் பதிவு செய்து பயன் பெற தகுதியுடையவராக உள்ளனர். இவற்றில் பயனாளிகள் 33669 நபர்கள் பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை பெற்று வருகின்றனர். இவற்றில் e-KYC பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 1643 பயனாளிகளுக்கு e-KYC செய்து கொடுத்திடவும், வங்கிகணக்குடன் ஆதார் எண் இணைப்பு செய்யப்படாமல் உள்ள 1512 பயனாளிகளை கண்டறிந்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 2025 -ம் மாதத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 163 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றுள் வேளாண்மை சார்ந்த மனுக்கள் 98 எண்களும், வேளாண்மை சாராத மனுக்கள் 65 எண்களும் பெறப்பட்டு, மனுக்களுக்குரிய பதில்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் சென்ற மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் மூலம் பெறப்பட்ட வேளாண்மை சார்ந்த 116 மனுக்கள் மற்றும் வேளாண்மை சாராத மனுக்கள் 45 இவற்றிற்கு பதிலுரைகள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு சம்மந்தப்பட்ட துறையினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக, சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் CMMK MKS திட்டத்தின் கீழ் ரூ.995 மானியத்தில் தக்கைப்பூண்டு ஒரு பயனாளிக்கும், FNS திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் உளுந்து மினிகிட் ஒரு பயனாளிக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் பணை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் பனை மதிப்பு கூடத்திற்காக ரூ.50 ஆயிரம் மானியம் ஒரு பயனாளிக்கும், தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு சிப்பம் கட்டும் அறை ரூ.2 இலட்சம் மானியத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம் துணை இயக்குநர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, இணை இயக்குநர் வேளாண்மை வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory