» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

செவ்வாய் 28, அக்டோபர் 2025 8:21:12 AM (IST)



நெல்லை சந்திப்பு சாலைக்குமாரசுவாமி கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில்  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஹோம பூஜைகள் மற்றும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுக நயினார் சன்னதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சுப்பிரமணியர் வெள்ளிக்குதிரை வாகனத்திலும், ஆறுமுகநயினார் சப்பரத்திலும் புறப்பட்டனர். சந்திப்பிள்ளையார் கோவில் முன்பு வேணுவன குமாரர், கோவிலில் இருந்து வேல் எடுத்து வந்து ஆறுமுகநயினார், சுப்பிரமணியர் முன்பு வந்து சேர்ந்தார். பின்னர் ரத வீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தையொட்டி அமைந்து இருக்கும் பாளையஞ்சாலைகுமார சுவாமி கோவிலில் மாலை கோவிலில் இருந்து சுவாமி சப்பரத்தில் வேலுடன் புறப்பட்டார். சந்திப்பு ரெயில்வே பீடர் ரோடு, சிந்துபூந்துறை சிவன்கோவில் அருகே, செல்விஅம்மன்கோவில் அருகே மற்றும் மேகலிங்கபுரம் ஆகிய இடங்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

குறுக்குத்துறை முருகன் கோவில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சூரனை வதம் செய்யும் போது பக்தி பரவசத்தில் முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா என பக்தி கோஷமிட்டு சுவாமியை தாிசித்து தங்கள் கந்த சஷ்டி விரதத்தினை முடித்துக்கொண்டனா்.

களக்காட்டில் பிரசித்தி பெற்ற சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், விஷேச அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், முருகப்பெருமான் திருவீதி உலா ரத்து செய்யப்பட்டது. 

இதுபோல கீழக்கருவேலங்குளம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விஷேச அலங்கார தீபாராதனைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று மதியம் சுமார் 12 மணிக்கு பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் இருந்து சூரபத்மன் விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலுக்கு எதிரே வந்து நின்றார். மாலை சுமார் 4 மணிக்கு பாபநாசத்திலிருந்து சுவாமி சுப்பிரமணியர் சிவந்தியப்பர் கோவிலுக்கு வந்தார். இருவரும் நேரடியாக சந்தித்ததை தொடர்ந்து விநாயகர் ரூபத்தில் இருந்த சூரனின் தலையை சுவாமி சுப்பிரமணியர் வதம் செய்தார். 

அப்போது சூரன் வெவ்வோறு ரூபம் எடுத்தார். ஆனாலும் சுவாமி சுப்பிரமணியர் சூரனினன் தலையை வதம் செய்தார். விக்கிரமசிங்கபுரம் ரதவீதிகளில் தொடர்ந்து சூரன் தலையை வதம் செய்தார். நிகழ்ச்சியில் இறுதியாக விக்கிரமசிங்கபுரம் வடக்குரதவீதியில் சூரனை சுவாமி சுப்பிரமணியர், சம்ஹாரம் செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் சுவாமி சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் கோவிலிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. சுப்பிரமணிய சுவாமி சன்னதி திடலில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்தார். அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வீதிஉலா நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory