» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)
திருநெல்வேலி இருந்து மங்களூருக்கு வாராந்திர இரவு நேர ரயிலை ரயில்வே அறிவித்துள்ளது. அதே வளையில், குமரி மாவட்ட பயணிகளின் நீண்ட கால கோரிக்கையான மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதியை வழங்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் வரை இந்த புதிய ரயில்கள் அறிவிப்பு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் இதுவரை ஒரு தினசரி ரயிலுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் புதிதாக மூன்று வழித்தடங்களில் அமித் பாரத் ரயில்கள்; நாகர்கோவில் - மங்களுர், திருவனந்தபுரம் - தாம்பரம் மற்றும் நாகர்கோவில் -நியூஜல்பைகுரி ஆகிய வழித்தடங்களில் அமித் பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. இந்த ரயில்கள் எல்லாம் வாராந்திர ரயில்கள் ஆகும். இது போன்ற வாராந்திர ரயில்கள் பெரிய அளவில் பயன் இல்லை. தினசரி ரயில்கள் இயக்கப்பட்டால் தான் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திருநெல்வேலி – மங்களுர் ரயில்
ரயில்வே வாரியம் திருநெல்வேலி இருந்து மங்களூருக்கு வாராந்திர இரவு நேர ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி இருந்து புறப்பட்டு விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு, கோழிக்கோடு கண்ணூர் காசர்கோடு வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இயக்கப்படும் ரயில் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மீதமுள்ள தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் இதற்கு முன்பு நடைபெற்ற விழாவில் நாகர்கோவில் - மங்களூர் வாராந்திர அமித் பாரத் ரயில் அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. ஆனால் இந்தரயில் பகல் நேர ரயில் இயங்கி வருகின்ற காரணத்தால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பெரிய அளவில் பயன் இல்லை.
கன்னியாகுமரி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலா தளம் ஆகும். கன்னியாகுமரியில் கடலில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குறிப்பாக கோவா, மங்களூர், கேரளாவிலிருந்து வருகை தருகிறார்கள். கர்நாடக அரசு ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி கர்நாடகாவில் கடற்கரை பகுதிகளில் இருந்து கன்னியாகுமரியிலிருந்து சுற்றுலா திட்டத்தை நிதி உதவியுடன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லாமல் மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வேலை, கல்வி மற்றும் புனித யாத்திரைக்காக கேரளாவிற்கு பயணிக்கின்றனர். குறிப்பாக, மலையாளம் பேசும் மக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற வட கேரள பகுதிகளுக்கு அதிகம் செல்கின்றனர். மேலும், கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் வார இறுதியில் வீடு திரும்புவதற்கு நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி, கும்பசேரி, தர்மஸ்தலா, கோகர்னா போன்ற புனித தலங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு நேரடி இரவு நேர ரயில் வசதி இல்லை. இதனால், அவர்கள் திருவனந்தபுரத்திற்கு பேருந்து மூலம் சென்று அங்கிருந்து ரயில் பயணம் செய்ய வேண்டியுள்ளது, இது நேரமும் செலவும் அதிகரிக்கச் செய்கிறது.
ஏரநாடு எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்தில் நிறுத்தம்
நாகர்கோவிலிருந்து மங்களுர்க்கு தினசரி பகல் நேரத்தில் பயணிக்கும் விதத்தில் தினசரி ரயில் ஏரநாடு ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ரயில் நள்ளிரவில் நாகர்கோவிலில் வந்து நள்ளிரவே நாகர்கோவிலிருந்து இருந்து புறப்படுவதால், கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படவில்லை. இதனால், இந்த ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவும் இருந்து இயங்கி வந்தது.
ஆனால் ரயில்வேதுறை இந்த ஏரநாடு ரயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்திவிட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்டதற்கு பதிலாக இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கி இருக்கலாம். அல்லது இதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் மூன்று இரவு நேர ரயில்களில் ஏதேனும் ஒரு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்கியிருக்கலாம். ஆனால் ரயில்வேதுறை இதுபோன்ற பயணிகள் நலன் பயக்கும் எந்த ஒரு செயலையும் செய்யவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் முக்கிய கோரிக்கை, (16347/16348) திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் வரை நீட்டிப்பு ஆகம். இந்த ரயிலின் காலி பெட்டிகள் காலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பும் செய்யப்படுகிறது. இவ்வாறு பராமரிப்பு செய்யும் இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும்.
திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு தற்போது மூன்று தினசரி இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு ரயிலை அதாவது (16347/16348) திருவனந்தபுரம் - மங்களூர் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது கேரள பயணிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, ஏனென்றால் தற்போது கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் திருவனந்தபுரத்துக்கு சென்றுவிட்டு இங்கிருந்து இயக்கப்படும் ஒரு ரயிலில்தான் பயணம் செய்கிறார்கள். தற்போது இந்த மூன்று ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கன்னியாகுமரி மாவட்டம் பயணிகளின் எண்ணிக்கையும் அடங்கும் ஆகும்.
கன்னியாகுமரி மாவட்ட பயணிகளின் நீண்ட கால கோரிக்கையான மங்களூருக்கு தினசரி இரவு நேர ரயில் வசதியை வழங்குவது, பயணிகள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயணத்தை எளிதாக்கும். திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (16347/16348) ரயிலை நீட்டிப்பது இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வாக அமையும். என்று பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)


D.வெங்கடேஷ் , மாநில துணைச் செயலாளா் , தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் - கோவில்பட்டி மண்டலம்Mar 8, 2026 - 06:24:27 AM | Posted IP 104.2*****