» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கியில் பேட்டரி வெடித்து தீவிபத்து : மேலாளர் உயிரிழப்பு!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 4:35:53 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கியில் பேட்டரி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வங்கியின் மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் (52) செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.  இவருக்கு உதவியாக தற்காலிக பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். 

இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண்ணும் ஸ்ரீதரனின் உதவியாளரும் மதிய உணவிற்காக வெளியில் சென்றுள்ளனர். ஸ்ரீதரன் மட்டும் தனியாக வங்கியில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்துள்ளது. பேட்டரி வெடித்ததில் தீ மள மளவென பரவி வங்கி முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. 

உடனே அவர் தனது மனைவிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் தீ முழுமையாக பரவியுள்ளது. இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது புகைமூட்டமாக இருந்துள்ளது, அருகில் இருந்தவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்று தீயில் சிக்கிய ஸ்ரீதரை மீட்டனர். ஆனால் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

சம்பவ இடத்தில் பெட்ரோல் கேனும், தீப்பெட்டியும் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். எனவே, கூட்டுறவு சங்கத்தில் இருந்த பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory