» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன்

வியாழன் 28, நவம்பர் 2024 10:51:12 AM (IST)

பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சமூகநலத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை தொடர்பான பயிலரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது.

சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, தொழிலாளர் நலத் துறை செயலர் கொ.வீரராகவராவ் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். 

பயிலரங்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: சமூகநலத் துறை, கல்வித் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை, காவல் துறை ஆகிய 4 துறைகளும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய அளவில் பணிபுரியும் பெண்கள் 42 சதவீதம் பேர் இருப்பது தமிழகத்தில்தான்.

எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் மூலம், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் 24,131 உள்ளக புகார் குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில், 5,498 இடங்களில் ‘பிங்க்’ பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சமூகநலத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிக்கிறார்கள்.

எனவே, பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். பெண்கள் புகார் அளித்தால்தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், தமிழகத்தில் பிற மாநில பெண்களும் அதிகளவில் பணிபுரிகிறார்கள்.

எனவே, உள்ளக புகார் குழுக்களில் பிற மாநில பெண்களையும் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சமூகநலத் துறையில் மகளிரின் உதவிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, ‘மகளிர் உதவி எண் திட்டம் 181’ சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory