» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்திய தமிழக அரசு: அன்புமணி கண்டனம்
செவ்வாய் 1, ஜூலை 2025 3:17:21 PM (IST)
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று நேற்று மாலை வரை கூறி வந்த தமிழக அரசு, நேற்று நள்ளிரவில் மின்சாரக் கட்டணத்தை 3.16% உயர்த்தியிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களையும், தொழில் வணிகத்துறையினரையும் மிகக் கடுமையாக பாதிக்கும் வகையிலான இந்த மின்கட்டண உயர்வு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
கிட்டத்தட்ட ரூ.3,500 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் திமுக அரசு, வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு ரூ.374 கோடியை மட்டும் தாங்களே ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்று நாடகம் நடத்துகிறது. கடந்த ஆண்டு வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் 4.83% உயர்த்திய தமிழக அரசு, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் தான் அதையும் விட்டு வைத்திருக்கிறது.
வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டதால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுவது அபத்தமான வாதம் ஆகும். கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். அந்த சுமை அப்பாவி மக்களின் தலையில் தான் சுமத்தப்படும்.
கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு ஏற்கனவே 3 முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அவற்றின் செலவு மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மூடப்பட்டு விட்டன. கடந்த காலங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையே குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இரக்கமே இல்லாமல் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மூடத் துடிக்கிறது திராவிட மாடல் அரசு.
மருந்துக்குக் கூட மனிதநேயமும், இரக்கமும் இல்லாமல் கொடுங்கோல் ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு தான் சான்றாகும். மக்களைப் பாதிக்கும் இந்த மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகங்கை வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
செவ்வாய் 1, ஜூலை 2025 7:46:56 PM (IST)

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)

அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)
