» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:28:06 AM (IST)

கட்சி தொடங்கியவுடன் முதல்-அமைச்சர் ஆகவில்லை என்றும், தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் மிரட்டிப் பார்க்கிறார்கள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘தி.மு.க. 75 அறிவுத்திருவிழா' நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முற்போக்கு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டதுடன், இருவண்ணக் கொடிக்கு வயது 75 இரண்டு நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
பின்னர் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு தி.மு.க. 75' நூலை வெளியிட்டு அவர் பேசியதாவது: 1967-ல் முதல் மாநிலக்கட்சியாக ஆட்சியை பிடித்த தி.மு.க. வரலாற்றை, இன்று பல ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதல்-அமைச்சர் நான்தான் என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை. நாம் பெற்ற வெற்றி என்பது இனி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை.
இந்த வரலாறு தெரியாத சிலர், நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள். சில அறிவிலிகள் தி.மு.க.வைப் போலவே வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு காண்கிறார்கள். தி.மு.க.வை போன்று வெற்றி பெற, உழைப்பும், அறிவும் தேவை. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தி.மு.க.தான். இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது.
கொள்கைகளை கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும், பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை. கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா? என்று முயற்சி செய்கிறார்கள். சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை (எஸ்.ஐ.ஆர்.) அவசரமாக நடத்துவதால், தேர்தல் நெருக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். அனைத்து அரசியல் கட்சிகளும் வேண்டாம் என்று சொல்லியும், ஏன் நடத்த வேண்டும்?.
ஆனால் தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கிவிட்டது. இதற்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். போராடப் போகிறோம், போராடுவோம். போலி வாக்காளர்கள் இடம்பெறாமலும், உண்மையான நம்முடைய வாக்காளர்கள் விடுபடாமலும், யாருடைய வாக்குரிமையும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும்போது எந்தக் காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது. 2019 முதல் தொடரும் நம்முடைய பயணம், 2026-ல் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்' பெரியார், அண்ணா, கருணாநிதி, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கொள்கை வாரிசுகள் இருக்கும் வரை, தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்.பி., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது!
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:20:41 AM (IST)

மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக வங்கிக்கணக்கை ஒட்டுமொத்தமாக முடக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:18:45 AM (IST)

தமிழகத்தில் தூத்துக்குடி உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
சனி 8, நவம்பர் 2025 12:45:48 PM (IST)

குமரியில் கொட்டி தீர்த்த மழையால் பயிர் நடவு பணி தீவிரம் : விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 8, நவம்பர் 2025 11:49:34 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தரிசன முறை தொடர்பான வழக்கு : அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
சனி 8, நவம்பர் 2025 8:43:15 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் லிஃப்ட் அமைக்க என்டிபிஎல் ரூ.94 லட்சம் உதவி
சனி 8, நவம்பர் 2025 8:02:14 AM (IST)




