» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செண்பகவல்லி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா : யாகசாலை பூஜைகள் நாளை துவக்கம்!

செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:08 AM (IST)



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் ஜன.25-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி, நாளை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்த அறங்காவலர் குழுவினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்.30-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கோயில் நிதி ரூ.6.40 லட்சத்தில் பளிங்கு கற்கள் அகற்றப்பட்டு, கருங்கற்களில் நீர் பாய்ச்சி சுத்தம் செய்தல், உபயதாரர் நிதி ரூ.25.50 லட்சத்தில் சுவாமி, அம்மன் சன்னதிகளில் தளம் அமைத்தல், உபயதாரர் நிதி ரூ.52 லட்சத்தில் ராஜகோபுரம் மற்றும் சன்னதி விமானங்களில் பஞ்சவர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. அந்த பணிகள் அனைத்தும் சுமார் 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. எஞ்சிய பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. 

இந்த நிலையில், இக்கோயிலில் ஜன.25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 25-ம் தேதி கோயில் முன்புள்ள மைதானத்தில் யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்கான கால்நாட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பந்தல் அமைக்கப்பட்டது. இதற்காக கோயிலின் இடதுபுறம், முன்புறம் என 2 யாகசாலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில், மொத்தம் 42 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நாளை (20-ம் தேதி) காலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.

நாளை காலை 7:00 மணிக்கு மேல் திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தன பூஜை, தான்ய பூஜை, கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, பஞ்சமுக விநாயகர் அபிஷேகம், தீபாராதனை, மகா அனுக்ஞை ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு மேல் பூஜைகள் துவங்கி நடைபெறுகின்றன. 

21-ம் தேதி காலை சாந்தி ஹோமம், சுவாசினி பூஜை, சுமங்கலி பூஜை, அஸ்வ பூஜை, மாலை 5:00 மணிக்கு மேல் ம்ருத்ஸ்ங்கரணம், அங்குரார்பணம், பாலிகாஸ்தாபனம், சோமகும்ப பூஜை, பேரீதாடனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியவை நடக்கின்றன. 

22-ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறுகின்றன. 23-ம் தேதி காலை 8:00 மணிக்கு மேல் 2-ம் கால யாகசாலை பூஜை, அன்று மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை, 24-ம் தேதி காலை 4-ம் கால யாகசாலை பூஜை, அன்று மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கின்றன. 25-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. 

அதன் பின்னர், அதிகாலை 4:30 மணிக்கு கடங்கள் யாகசாலையில் இருந்து கோயிலுக்கு புறப்படுதல், 5:00 மணிக்கு மேல் ராஜகோபுரம், சாலை கோபுரம், விமானங்கள், அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.


தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு மூலவர் சுவாமி, அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 7:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கின்றன. மகா கும்பாபிஷேக பூஜைகள் ரகு பரசுராம பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர். 

ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் செல்வி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) பாலமுருகன், அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜ், ரவீந்தர், நிறுத்தியலட்சுமி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory