» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: அமைச்சர் என். ஆனந்த் நம்பிக்கை!

வியாழன் 28, மே 2026 5:16:33 PM (IST)

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்துப் பகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணையும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த விழாவில் நிர்வாகிகளுக்கு மத்தியில் என். ஆனந்த் பேசியதாவது: "மாற்றுக்கட்சியில் இருந்து விலகி நம்மோடு இணைந்துள்ள புதியவர்களுக்குக் கட்சியில் உரிய மரியாதையும் தகுந்த அங்கீகாரமும் கண்டிப்பாகக் கிடைக்கும். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், மிதிவண்டிகளில் சென்று போஸ்டர் ஒட்டிய சாதாரணத் தொண்டர்கள் தான் இன்று மக்கள் பிரதிநிதிகளாக உயர்ந்துள்ளனர்.

புதிதாக வந்தவர்களுக்கும், ஏற்கனவே கட்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் சில அச்சங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் யாரையும் நம்முடைய தலைவர் விஜய் கைவிடமாட்டார். புதியவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டப்படாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மக்களுக்குச் சேவை செய்வது மட்டுமே எங்களது ஒரே நோக்கமாகும். எங்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை; எந்தக் காரணத்தைக் கொண்டும் நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், ஊழல் செய்யவும் வரவில்லை. மீறி யாராவது ஊழல் செய்தால், அடுத்த விநாடியே நமது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவார். எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற வேண்டும்." என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory