» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி!

திங்கள் 17, நவம்பர் 2025 8:54:24 AM (IST)



கொல்கத்தாவில் நடந்த தென்ஆப்பிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட விரட்டிப் பிடிக்க முடியாமல் 93 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் எடுத்தன. 30 ரன் பின்தங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பவுமா (29 ரன்), கார்பின் பாஷ் (1 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த பவுமா- கார்பின் பாஷ் கூட்டணி மேற்கொண்டு ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்ததுடன் தங்களது முன்னிலை ஸ்கோரையும் 100-ஐ கடக்க வைத்தது. குல்தீப் யாதவின் பந்தில், கார்பின் பாஷ் மெகா சிக்சர் ஒன்றை பறக்க விட்டார். ஸ்கோர் 135-ஆக உயர்ந்த போது கார்பின் பாஷ் 25 ரன்களில் (37 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பும்ராவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். மனஉறுதியுடன் போராடிய கேப்டன் பவுமா தனது 26-வது அரைசதத்தை நிறைவு செய்தார். கடைசி இரு விக்கெட்டுகளை முகமது சிராஜ் காலி செய்தார்.

தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 54 ஓவர்களில் 153 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பவுமா 55 ரன்களுடன் (136 பந்து, 4 பவுண்டரி) களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதன் மூலம் இந்தியாவுக்கு 124 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கழுத்து வலியால் முந்தைய நாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கேப்டன் சுப்மன் கில் ஆடமாட்டார் என காலையிலேயே அறிவிக்கப்பட்டதால் இந்தியாவின் கைவசம் 9 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. அதுவே இந்தியாவுக்கு இறுக்கமான ஒரு சூழலை உருவாக்கியது.

சிறிய இலக்கை நோக்கி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் 2-வது இன்னிங்சை தொடங்கினர். ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஜெய்ஸ்வால் (0) மார்கோ யான்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் வெரைனிடம் கேட்ச் ஆனார். அவரது அடுத்த ஓவரில் சற்று எழும்பி வந்த பந்தில் ராகுலும் (1 ரன்) அதே போல் சிக்கினார்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் இந்தியாவின் போக்கு அமைந்து விட்டது. ஆடுகளத்தில் பவுன்சுடன், பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் துல்லியமாக கணிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய வாஷிங்டன் சுந்தர் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த இன்னொரு பக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 

துருவ் ஜூரெல் (13 ரன்), சைமன் ஹார்மர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த துணை கேப்டன் ரிஷப் பண்ட் (2 ரன்) ஹார்மரின் சுழலில் தடுமாறியதோடு கடைசியில் அவரிடமே பிடிபட்டு கிளம்பினார். இதன் பின்னர் வாஷிங்டன் சுந்தரும், ரவீந்திர ஜடேஜாவும் கைகோர்த்து அணியை சிக்கலில் இருந்து சற்று மீட்பது போல் தெரிந்தது. ஆனால் முக்கியமான கட்டத்தில் இந்த கூட்டணியும் உடைந்தது.

அணியின் ஸ்கோர் 64-ஐ எட்டிய போது ஜடேஜா (18 ரன்) ஹார்மரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. சிறிது நேரத்தில் வாஷிங்டன் சுந்தரும் (31 ரன், 92 பந்து, 2 பவுண்டரி) வீழ்ந்தார். இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி முற்றியது. தென்ஆப்பிரிக்காவின் கை ஓங்கியது.

இதற்கிடையே 7-வது வரிசையில் நுழைந்த அக்‌ஷர் பட்டேல், சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜின் ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசி ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தார். 12 ஓவர்களுக்கு பிறகு பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டி கொஞ்சம் நம்பிக்கை தந்த அக்‌ஷர் பட்டேல் (26 ரன், 17 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) மறுபடியும் சிக்சருக்கு முயற்சித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தில் கேட்ச் ஆனார். அத்துடன் இந்தியாவின் நம்பிக்கையும் சிதைந்தது. 

கடைசி விக்கெட்டுக்கு இறங்கிய முகமது சிராஜ் (0) சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 35 ஓவர்களில் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. டெஸ்டில் அந்த அணிக்கு இந்திய மண்ணில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.

அதே சமயம் இந்த மைதானத்தில் இந்தியாவின் 2-வது குறைந்த ஸ்கோராக இது பதிவானது. நமது அணி எளிதில் வெற்றிக்கனியை பறிக்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.தென்ஆப்பிரிக்க தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டும், யான்சென், கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். இரு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய ஹார்மர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

2 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory